இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும், இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளருமான சஞ்சய் பங்கரின் மகன் ஆர்யன். இவர் தற்போது ஹார்மோன் மாற்று சிகிச்சை எடுத்துக் கொண்டு பெண்ணாக மாறியுள்ளது இணையத்தில் பெரும் பேசு பொருளாக மாறியிருக்கிறது.
ஆர்யன் தான் பெண்ணாக மாறியது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் வீடியோ ஒன்றின் மூலம் இந்த தகவல் வெளி உலகத்திற்கு அறிவித்துள்ளார். அவர் சில ஆண்டுகளுக்கு முன்பே தன்னை பெண்ணாக மாற்றிக் கொண்டிருக்கிறார்.
அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அந்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். ஆனால், அது சஞ்சய் பங்கரின் மகன் ஆர்யன் என்பது யாருக்கும் தெரியவில்லை. தற்போது அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில் அவர் ஆணாக இருந்தபோது இந்திய கிரிக்கெட் வீரர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்.
அதன் மூலம் சஞ்சய் பங்கரின் மகன் ஆர்யன் தான் தற்போது பெண்ணாக மாறி இருக்கிறார் என்பது வெளி உலகத்திற்கு தெரிய வந்துள்ளது. மேலும், ஆர்யன் என்ற தனது பெயரை அனயா என மாற்றிக் கொண்டு இருக்கிறார். அவர் உள்ளூர் அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் இதற்கு முன்பு விளையாடி வந்தார். ஆனால், அவருக்கு போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதனிடையே, தான் பெண்ணாக உணர்ந்ததை அடுத்து அவர் ஹார்மோன் மாற்று சிகிச்சை மேற்கொண்டு தற்போது பெண்ணாக மாறி இருக்கிறார். இந்த தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பலரும் அவரது முடிவுக்கு வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.
இதுபற்றி தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர், “சிறு வயதிலிருந்தே கிரிக்கெட் என் வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருந்து வருகிறது. வளரும்போது, என் அப்பா நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதையும் பயிற்சியளிப்பதையும் நான் பிரமிப்புடன் பார்த்தேன், அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுவது பற்றி நான் கனவு காணத் தொடங்குவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, விளையாட்டில் அவர் காட்டிய ஆர்வமும், ஒழுக்கமும், அர்ப்பணிப்பும் எனக்கு ஆழமான உத்வேகத்தை அளித்தன. கிரிக்கெட் எனது காதலாகவும், லட்சியமாகவும், எதிர்காலமாகவும் மாறியது. எனது முழு வாழ்க்கையையும் எனது திறமைகளை மெருகேற்றுவதற்காக செலவிட்டேன், ஒரு நாள், அவரைப் போலவே எனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்.
எனது ஆர்வம், என் காதல் மற்றும் எனது தப்பித்தல் ஆகிய விளையாட்டை நான் கைவிட வேண்டும் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை. ஆனால் இங்கே நான் ஒரு வேதனையான யதார்த்தத்தை எதிர்கொள்கிறேன். ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட் தெரபியில் (HRT) ஒரு டிரான்ஸ் வுமன் என்ற முறையில், என் உடல் கடுமையாக மாறிவிட்டது. நான் ஒரு காலத்தில் நம்பியிருந்த தசை நிறை, வலிமை, தசை நினைவகம் மற்றும் தடகள திறன்களை இழந்து வருகிறேன். நான் நீண்ட காலமாக நேசித்த விளையாட்டு என்னிடமிருந்து நழுவி வருகிறது, ”என்று ஆர்யன் (இப்போது அனயா) தனது பதிவில் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“