T20 World Cup 2024 | Virat Kholi | Hardik Pandya: 2024 ஆம் ஆண்டுக்கான ஆடவர் டி-20 உலகக் கோப்பை போட்டிகள் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா நாடுகளில் வருகிற ஜூன் 2 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளது. இந்த தொடரில் ஜூன் 9 ஆம் தேதி அன்று நியூயார்க்கின் புறநகர் பகுதியில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் அரங்கேறும் லீக் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
இதனிடையே, இந்திய மண்ணில் நடைபெற்று வரும் 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் இந்திய வீரர்கள் அதிரடியாக விளையாடி அனைவரும் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்கள். இதில், எந்த வீரரை டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் சேர்ப்பது என்கிற குழப்பம் தேர்வாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பரபரப்பு கருத்து
இந்நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான தனது 15 பேர் கொண்ட இந்திய அணியை முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தேர்வு செய்துள்ளார். அவரது பட்டியலில் இருந்து நட்சத்திர வீரரான விராட் கோலி, ஆல்ரவுண்டர் வீரர் ஹர்திக் பாண்டியா ஆகியோரது பெயர்கள் இடம் பெறவில்லை. இது ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் நிபுணர்களிடையே கடும் விவாதத்தைத் தூண்டியுள்ளது.
/indian-express-tamil/media/post_attachments/b3c81ed2-03f.jpg)
மஞ்ச்ரேக்கர் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரைத் தேர்வு செய்துள்ளார். அடுத்த படியாக, 3-வது வீரராக சஞ்சு சாம்சன், 4-வது வீரராக சூர்யகுமார் யாதவ் ஆகியோரைத் தேர்வு செய்துள்ளார். அவரது ஆடும் லெவன் பட்டியலில் ரிஷப் பந்த், கே.எல்.ராகுல் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகிய 3 விக்கெட் கீப்பர்கள் இடம்பெற்றுள்ளனர்.
ஸ்பின் ஆல்ரவுண்டர்களாக ரவீந்திர ஜடேஜா-வையும் க்ருனால் பாண்டியா-வையும் தேர்வு செய்துள்ள மஞ்ச்ரேகர் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் ஷிவம் துபே ஆகியோரை நீக்கியுள்ளார். சுழற்பந்து வீச்சுக்கு குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வேந்திர சாஹலையும், வேகத் தாக்குதல் தொடுக்க ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகியோரையும் அவர் தேர்வு செய்துள்ளார்.
"குல்தீப் யாதவ் தனது திறமைகள் மற்றும் அவரது நம்பிக்கை ஆகியவற்றின் உச்சத்தில் அவர் இருக்கிறார். இப்போது அவர் பும்ரா அல்லது சாஹல் போல் உச்சத்தில் இருப்பதை நீங்கள் பார்க்கலாம். அந்த அளவுக்கு அவர் ஆதிக்கம் செலுத்துகிறார். அவர் பொறுப்பாகவும், மற்ற வீரர்களுடன் வசதியாக இருக்கிறார். சரியான இடைவெளியில் மற்றும் சரியான நேரத்தில் நீங்கள் தேடும் திருப்புமுனையை ஏற்படுத்துகிறார். " என்று முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறினார்.
டி20 உலகக் கோப்பைக்கான சஞ்சய் மஞ்சரேக்கரின் இந்திய அணி
ரோகித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், அவேஷ் கான், ஹர்ஷித் ராணா, மயங்க் யாதவ், க்ருணால் பாண்டியா.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“