Sanju Samson shares fanboy moment with Rajinikanth Tamil News
Rajinikanth, Sanju Samson Tamil News: இந்திய கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பர் வீரராகவும், ஐ.பி.எல் தொடருக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாகவும் களமாடி வருபவர் சஞ்சு சாம்சன். கேரளாவைச் சேர்ந்த இவர் டி20 போட்டிகளில் அதிரடியாக ரன்களை குவிப்பதில் வல்லவராக திகழ்ந்து வருகிறார். அவர் தலைமையிலான ராஜஸ்தான் அணி கடந்த ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
Advertisment
இருப்பினும், சஞ்சுவுக்கான இந்திய அணி வாய்ப்பு தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. ஐ.பி.எல் மற்றும் இந்திய அணியில் அவ்வப்போது கிடைக்கும் வாய்ப்புகளில் தனது திறனை நிரூபித்த போதிலும் அவரை அணியில் சேர்ப்பதில் இருந்து தவிர்த்து வருகின்றனர் பிசிசிஐ நிர்வாகிகள். இந்திய விக்கெட் கீப்பர் வீரர் ரிஷப் பண்ட் தனது காயத்தில் இருந்து மீண்டும் வரும் நிலையில், அவரது இடத்திற்குக் கூட சஞ்சு பரிசீலிக்கப்படவில்லை.
சஞ்சுவை இந்திய அணியில் சேர்க்க வேண்டும் எனவும், அவரது திறனை உலக அரங்கில் நிரூபிக்க வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர். இதேபோல், கேரள காங்கிரஸ் எம்.பி சசி தரூர் போன்ற அரசியல் தலைவர்களும் அவருக்கு ஆதரவாக பேசி வருகின்றனர். தனக்கு திறக்காத பிசிசிஐ-யின் கதவுகளை உடைக்க இந்த ஆண்டு நடக்கவிருக்கும் ஐ.பி.ல் தொடர் போட்டிகளுக்காக ஆயத்தமாகி வருகிறார் சஞ்சு.
Advertisment
Advertisements
சூப்பர் ஸ்டாரை சந்தித்த கிரிக்கெட் ஸ்டார்
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் நட்சத்திரமான சஞ்சு சாம்சன் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்டு பேசிய வீடியோவை சஞ்சு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் சஞ்சு, இதற்கு முன்பு தான் தீவிர சூப்பர் ஸ்டார் ரசிகன் என சில பேட்டிகளில் கூறிய வீடியோக்களை எடிட் செய்தும் அதனுடன் தற்போது சந்தித்த வீடியோ மற்றும் புகைப்படங்களையும் இணைத்தும் பகிர்ந்துள்ளார். பின்னணியில் ரஜினி நடித்த 'படையப்பா' படத்தின் 'சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு' என்ற பாடல் ஒலிக்கிறது.
வீடியோவின் கேப்ஷனில், "நான் 7 வயதிலிருந்தே சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகன் ஆகிவிட்டேன். அப்போது ஒரு நாள் நான் ரஜினி சாரை அவர் வீட்டிற்கு போய் சந்திப்பேன் என பெற்றோரிடம் நான் கூறியிருந்தேன். சுமார் 21 வருடங்களுக்கு பின் அந்த நாள் வந்து விட்டது. தலைவர் என்னை சந்திக்க எனக்கு அழைப்பு விடுத்தார்." என்று கூறி நெகிழ்ந்துள்ளார் சஞ்சு சாம்சன்.