சஞ்சு சாம்சன்.... இந்திய அணியில் மட்டுமல்ல, இந்த ஐபிஎல் சீஸனின் ரைஸிங் ஸ்டாரும் அவர்தான். இந்த லாக் டவுன் காலகட்டத்தில், தனது அடுத்த போட்டியை எப்போது தொடங்கும் என்பது குறித்து எந்த தெளிவும் இல்லாதபோது, சஞ்சு சாம்சன் இந்தக் காலகட்டத்தில் தனது விளையாட்டை மறுபரிசீலனை செய்வதற்கும் அவரது திறமைகளை நன்றாகக் கற்றுக்கொள்வதற்கும் வாய்ப்பாக பயன்படுத்தி கொண்டார். இதற்கான பயிற்சியை கடந்த ஏப்ரல் மாதமே, திருவனந்தபுரத்தில் தனது வழிகாட்டியும், முன்னாள் கேரள அணியின் வீரருமான ரைபி கோம்ஸுடன் தொடங்கிவிட்டார். இருவரும் சேர்ந்து விவாதிப்பது கிரிக்கெட்டை பற்றித் தான். ஒருமுறை விவாதத்தின்போது, சஞ்சு கோமஸிடம், ``நிலைத்தன்மை இல்லாத தனது ஆட்டம், தன்னை சிறந்த ரன்-ஸ்கோரராக ஆவதை தடுக்கிறது'' எனக் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பேசிய கோமஸ், ``கடந்த ஐபிஎல்லில் ஒரு சதத்திற்குப் பிறகு சஞ்சு சொல்லிக்கொள்ளும்படியாக விளையாடவில்லை. இது இப்போது அவரைத் துன்புறுத்துகிறது. இதனால் தான் ஆட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியவில்லையே என்று அவர் கவலைப்பட்டார்" எனப் பேசியுள்ளார். இதையடுத்துதான் சஞ்சு, திருவந்தபுரத்தின் மார் இவானியோஸ் கல்லூரியில் தன்னுடன் பயின்ற அமல் மனோகரை அழைத்து பேசியுள்ளார். இந்த அமல் மனோகர், முன்னாள் தேசிய அளவிலான தடகள வீரர். இவர் இப்போது உடற்பயிற்சி பயிற்சியாளராக உள்ளார். பேட்மிண்டன் வீரர் எச்.எஸ்.பிரனோய் போன்ற பிற சிறந்த விளையாட்டு வீரர்களுடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறார் இந்த மனோகர்.
மனோகர் சஞ்சுவை நான்கு விதங்களில் பரிசோதித்துள்ளார். வேகம், வலிமை, சகிப்புத்தன்மை மற்றும் சுறுசுறுப்பு ஆகிய நான்கு விதங்களில் அவர் சோதனை செய்துள்ளார். இந்த சோதனையின் முடிவுகளே, தற்போதைய ஐபிஎல் சீசனில், சஞ்சு தனது ஆட்டத்திறனை மேம்படுத்த உதவியுள்ளது. “நாங்கள் ஏப்ரல் மாதத்தில் சந்தித்தோம், சஞ்சு மீது ஒரு அடிப்படை சோதனை நடத்திய பிறகு, ஐ.பி.எல்லில் ஒவ்வொரு போட்டிகளுக்கும் இடையே, தன்னை தயார்படுத்தி கொள்ள, சஞ்சுவுக்கு நேரம் கிடைப்பதில்லை என்பதை நான் உணர்ந்தேன்.
எளிமையாகச் சொன்னால், அவர் ஒரு போட்டியில் இருந்து மற்றொரு போட்டிக்கு சோர்வை சுமந்து கொண்டிருந்தார். இது ஒரு தடையாக இருந்தது” என்று விளக்கும் மனோகர் இதன்பின் சஞ்சுவுக்கு தொடர்ச்சியான பயிற்சிகளை வகுத்தார். இந்த பயிற்சி சஞ்சவுக்கு தசை பிரச்சனையை தீர்க்கவும், வலிமையாகவும், சுறுசுறுப்பை மேம்படுத்தவும் உதவியது. இந்த அம்சங்களில் சஞ்சு விடாமுயற்சியுடன் பணியாற்றினார், நான்கு வாரங்களுக்குள், நல்ல முன்னேற்றங்கள் தெரிய ஆரம்பித்தது.
இதில் மற்றொரு அம்சம், கவனிக்கும் வகையில் இருந்தது என்றால் அது அவரின் டயட். அப்படியானால் சஞ்சு உணவு பழக்கவழக்கங்களை சரியாக கவனிக்கவில்லையா என்றால், அது தவறு. அனுபவம் வாய்ந்த ஒருவர் தனது உணவு பழக்கவழக்கங்களை கண்காணிக்க சஞ்சு விரும்பினார். இதற்காக பணியமர்த்தப்பட்டவர் ஜாம் ஜாம் பன் கபேயில் நிர்வாக சமையல்காரரான அருண். இவரை பணிக்கு சேர்த்ததில் முக்கிய பங்கு வகித்தவர் கோமஸ். ``ஒரு நண்பர் இவரின் பெயரை பரிந்துரைத்திருந்தார். எனவே, நான் அவருக்கு ஒரு மெனுவை அனுப்பி, சஞ்சுவுக்கு உணவு தயாரிக்கச் சொன்னேன், அவர் உடனடியாக அதற்கான தயாரிப்புகளுடன் எங்களுக்கு முன் வந்தார்" என்று சமையல்காரரை பற்றி விவரிக்கிறார் கோமஸ்.
``விளையாட்டு வீரர்களின் தேவைகளுக்கு ஏற்ப ஒரு மெனுவைத் தயாரிப்பது ஒரு சவால். சஞ்சுவின் உடற்தகுதியில் சமரசம் செய்யக்கூடாது என்பதை உறுதிப்படுத்த நான் மெனக்கெட்டேன்”என்று அருண் கூறினார். லாக் டவுனில் சஞ்சு குறைந்தபட்சம் ஐந்து மணிநேரம் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அருண், வாட்ஸ்அப்பில் சஞ்சுவை தொடர்புகொண்டு அவருக்கான மெனுவை கூறிவந்துள்ளார். பொதுவாக, மதிய உணவில் கோதுமை டாலியா காளான், முட்டையின் வெள்ளைக்கரு, கோழி தர்பூசணி விதை சாலட் மற்றும் மிக்ஸ்ட் ஃப்ரூட் ஆகியவை, இரவு உணவில் பொதுவாக கிவி மரினேட் செய்யப்பட்ட கோழிக்கறி, முட்டை வெள்ளைக்கரு, வெள்ளரி மற்றும் ஜலபெனோ கார்ன் கர்னல் சாலட் ஆகியவை தயாரித்து கொடுக்கப்பட்டுள்ளன.
`` சில நேரங்களில், நான் டாலியாவை அரிசியுடன் மாற்றுவேன், மேலும் மீன்களை ஒரு வழக்கமான அடிப்படையில் சேர்த்துக் கொள்வேன், ஏனெனில் சஞ்சு மெலிந்த இறைச்சியை விட கடல் உணவை விரும்புகிறார். குறைந்த பட்சம் மூன்று வகையான பழங்கள் மற்றும் சிற்றுண்டிகளையும் மஃபின்கள் மற்றும் குக்கீகள் போன்றவை முழுக்க மாவுகளிலிருந்து தயாரிக்கப்பட்ட உணவுகளே அவருக்கு கொடுக்கப்பட்டன" என சஞ்சுவின் டயட்டை பற்றி கூறுகிறார் அருண். இந்த கடின உழைப்பும் தயாரிப்பும் மதிப்புக்குரியது என்பது சஞ்சு ஆடிய இரண்டு ஆட்டங்களில் தெளிவாக காணமுடிகிறது. இந்த ஐபிஎல்லில் சஞ்சுவின் பேட்டிங்கில் நிறைய மாற்றங்கள் தெரிகின்றன. குறிப்பாக து - சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக 32 பந்துகள் 74 மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாபிற்கு எதிராக 42 பந்துகள் 85 ரன்கள் என அவர் விளாசியதை நம் கண்ணால் கண்டோம்.
``எனது விளையாட்டு குறித்து இப்போது மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்கிறேன். தவிர, எனது உடற்பயிற்சி, உணவு, பயிற்சி மற்றும் எனது வலிமை ஆகியவற்றில் நான் கடுமையாக உழைத்து வருகிறேன், ஏனென்றால் நிறைய அதிரடி ஆட்டங்களை நான் விளையாட வேண்டியிருக்கிறது" எனக் கூறும் சஞ்சுவிடம், பவர்-ஹிட்டரின் அனைத்து பண்புகளையும் வைத்திருக்கிறார் என்பது இரண்டு ஆட்டங்களில் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அவர் முன்பை விட புத்துணர்ச்சியுடனும், எளிதாகவும் இருக்கிறார்.
டென்னிஸ் பந்துகளில் பயிற்சி!
இந்த ஐபிஎல் சீசனில் சஞ்சுவின் சிறப்பான தொடக்கத்திற்கு பிறகு, அவர் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும் என்று கோம்ஸ் நம்புகிறார். ``இந்த ஐபிஎல் எனக்கு ஒரு விழிப்புணர்வாக அமைந்தது. லகத் தரம் வாய்ந்த சில வீரர்கள் எவ்வாறு பயிற்சியளித்து செயல்படுகிறார்கள் என்பதைப் பற்றிய ஒரு நுண்ணறிவை இது எனக்குக் கொடுத்தது. உங்கள் கிரிக்கெட் திறன்கள் மட்டுமே உங்களுக்கு வெற்றிக்கு உத்தரவாதம் அளிக்காது என்பதை நான் உணர்ந்தேன். உங்கள் உணவு, உடற்பயிற்சி மற்றும் மனம் ஒருநிலையாக இருக்கும்போது, நன்றாக செயல்பட முடியும் என்பதை உணர்ந்தேன். லாக் டவுன் நேரத்தை சஞ்சு தனது நன்மைக்காக பயன்படுத்தியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், ”என்று கோமஸ் கருத்து தெரிவித்தார்.
கிரிக்கெட் போட்டிகளே இல்லாத இந்த ஐந்து மாதங்களில், சஞ்சு கோமஸின் மொட்டை மாடியில் டென்னிஸ் பந்துகளுடன் தவறாமல் பயிற்சி பெற்றார். "நீங்கள் ஒரு ஷாட் மாஸ்டர் செய்ய விரும்பினால், நீங்கள் குறைந்தபட்சம் 10,000 பந்துகளை விளையாட வேண்டும் என்று ராகுல் டிராவிட் கூறியிருந்தார். உடற்பயிற்சி மற்றும் டயட்டை தாண்டி, சிலவற்றை இந்த இடைப்பட்ட நேரங்களில் சஞ்சு செய்தார். இத்தகைய விரிவான தயாரிப்பு அவசியம். ஏனென்றால் அப்போதுதான் நீங்கள் ஐபிஎல்லில் சதத்துக்கு பின் தொடர்ந்து நல்ல ஆட்டங்களை உங்களால் விளையாட முடியும். இன்னும் புதியதாக இருக்க முடியும், ஏனென்றால் உங்கள் உடலுக்கு உங்களைத் தூண்டுவதற்கு அந்த ஆற்றல் தேவைப்படுகிறது. இந்த ஐந்து மாதங்களில் சஞ்சு கடுமையாக உழைத்துள்ளார், இப்போது ஒரு நல்ல தொடக்கத்திற்கு வந்துவிட்டார். அவர் அதை கணக்கிட முடியும் என்று நான் நம்புகிறேன்" என்று கூறும் கோமஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஐ.பி.எல் விளையாடி வரும் சஞ்சு உடன் தொலைபேசி வாயிலாக தொடர்ந்து டச்சில் இருந்து வருகிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.