பணிபுரியும் இடத்தில் சாதி மற்றும் பாலியல் ரீதியாக பல்வேறு சோதனைகளுக்கு ஆளாவதாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் புகார் அளித்துள்ளார் தடகள வீராங்கனை சாந்தி சவுந்தரராஜன்.
சாந்தி சவுந்தரராஜன் :
2006 ஆம் ஆண்டு நடைப்பெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று ஓட்டு மொத்த இந்தியாவுக்கும் பெருமை சேர்த்து தந்தவர் தான் தடகள வீராங்கனை சாந்தி சாந்தி சவுந்தரராஜன். 800 மீட்டர் ஓட்டப் பந்தையத்தில் சாந்தி வெள்ளி பதக்கம் வென்றவுடன் தமிழக மக்கள் அனைவரும் அவரை தூக்கி வைத்து கொண்டாட துவங்கினர்.
ஒட்டு மொத்த மீடியாவின் பார்வையும் சாந்தி சவுந்தரராஜன் மீது தான். அவரின் வீடு தேடி பரிசுகளும், வாழ்த்து மடல்களும் குவிந்தனர். இந்த நிலையில் தான் அவரின் வாழ்வில் புயல் அடித்தது. வெள்ளி பதக்கம் வென்ற சாந்தி பெண்மை தன்மை இல்லாதவர், ஆண் தன்மை கொண்டவர் என்று அதிர்ச்சி தகவலை கூறியது சர்வதேச தடகள சம்மேளனம்.
இதனால் அவரது வெள்ளி பதக்கம் பறிக்கப்பட்டது. பதக்கம் போனது வேறு, பழி வேறு என்று இருபெரும் தாக்குதலில் சிக்கி திணறிப்போனார் சாந்தி சவுந்தரராஜன். இத்தனைக்கும், சாந்திக்கு எதிராக நடத்தப்பட்ட சதிதான் இந்த பதக்க பறிப்பு என்று கூறிய ஆர்வலர்கள் சாந்திக்கு முழு அளவில் ஆதரவு தெரிவித்தனர். ஆனாலும், அங்கீகரிக்கப்பட்ட இடத்தில் இருந்து அவருக்கு அங்கீகாரம் கிடைக்காத நிலையில், அரசு வேலை கிடைக்காமல் பல ஆண்டுகளாக அவர் அவதிப்பட்டு வந்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2018/09/2-8.jpg)
இந்நிலையில் தான் சாந்திக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்சியாளரார் வேலை கிடைத்தது. எத்தனை போராட்டங்கள், இன்னல்கள் மத்தியில் சாந்திக்கு கிடைத்த இந்த வேலையை அவர் கடவுள் தந்த அடுத்த வாய்ப்பாக பார்த்தார். ஆனால் அதிலும் தற்போது அடுத்த போராட்டம் துவங்கி விட்டது.
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சாந்தியை, அவருடன் பணிப்புரியும் நபர் சாதி மற்றும் பாலியல் ரீதியாக விமர்சிப்பதாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் சாந்தி கூறியிருப்பதாவது, “ தான் ஒரு பெண் அல்ல என அலுவலகத்தில் அந்நபர் வதந்தி பரப்பி வருகிறார்.
தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி என்னை பயிற்சியாளர் பணி செய்ய விடாமல், அண்மையில் அலுவலகப் பணிக்கு மாற்றி விட்டார். பயிற்சி பெறும் மாணவர்களிடம் ‘மிஸ்டர்’ சாந்தி எங்கே? என்று கேட்டு என்னை பாலியல் ரீதியாகவும் விமர்சித்துள்ளார்” என்று கூறியுள்ளார்.
இதுக்குறித்து சாந்தியின் நெருங்கிய நண்பர் ஒருவர் பிரபல நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் “ தனக்கு அரசுப் பணி வழங்கியதற்காக சாந்தி தமிழக அரசுக்கு நன்றி உணர்வுடன் இருக்கிறார். ஆனால், அவருடன் பணிபுரிபவர் அவருடைய பாலினம் குறித்தும், சாதி குறித்தும் அவரைச் சீண்டுகிறார். இது பாலியல் துன்புறுத்தல். நாங்கள் அவருடன் இருக்கிறோம். அவருக்கு நீதி கிடைக்கப் போராடுவோம். இதுகுறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் உரிமைகள் ஆணையத்திடம் புகார் அளிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
கிராமப்புற சூழலில் இருந்து, வசதி குறைந்த பின்புலத்தை வைத்துக் கொண்டு கடின உழைப்பால் முன்னேறி நாட்டுக்கு பெருமை சேர்த்த சாந்தியின் வாழ்க்கையில் இத்தனை சோதனைகள் மாறி மாறி விரட்டுவது கேட்பவர்களுக்கும் கண்ணீரை வரவைத்துள்ளது.