மும்பை - ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகளுக்கு இடையிலான இரானி கோப்பை தொடருக்கான டெஸ்ட் போட்டி லக்னோவில் கடந்த 1 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ரெஸ்ட் ஆப் இந்தியா கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 68 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்திருந்தது. மும்பை தரப்பில் ரகானே 86 ரன் (197 பந்துகள்), சர்பராஸ் கான் 54 ரன் (88 பந்துகள்) எடுத்து களத்தில் இருந்தனர். ரெஸ்ட் ஆப் இந்தியா தரப்பில் முகேஷ் குமார் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இந்நிலையில், 2வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் மும்பை தொடர்ந்து பேட்டிங் செய்தது. சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரகானே 97 ரன்னிலும் அடுத்து வந்த ஷாம்ஸ் முலானி 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதன்பின்னர் களத்தில் இருந்த சர்பராஸ் கானுடன், தனுஷ் கோட்யான் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சர்பராஸ் இரட்டை சதம் அடித்து அசத்தினார். மறுமுனையில் தனுஷ் கோட்யான் அரைசதம் அடித்த நிலையில் 64 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய மோஹித் அவஸ்தி ரன் எடுக்காமலும், ஷர்துல் தாக்கூர் 36 ரன்னிலும் அவுட் ஆகினர்.
இறுதியில் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் மும்பை 138 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 536 ரன்கள் எடுத்துள்ளது. மும்பை தரப்பில் சர்பராஸ் கான் 221 ரன்னுடனும், எம் ஜூனேட் கான் ரன் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். ரெஸ்ட் ஆப் இந்தியா தரப்பில் முகேஷ் குமார் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார். நாளை 3ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.
சாதனை படைத்த சர்பராஸ் கான்
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் இரட்டை சதம் அடித்ததன் மூலம் இரானி கோப்பை வரலாற்றில் முதல் மும்பை வீரராக சர்பராஸ் கான் வரலாற்று சாதனையை படைத்துள்ளார். அதாவது, இரானி கோப்பை வரலாற்றில் இரட்டை சதம் அடித்த முதல் மும்பை வீரர் என்கிற வரலாற்று சாதனையை அவர் படைத்து அசத்தி இருக்கிறார். அவருக்கு ரசிகர்கள், வீரர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். மும்பை அணிக்காக ஆடிய ஜாம்பவான் வீரர்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் சுனில் கவாஸ்கர் கூட இத்தகைய சாதனையை நிகழ்த்தவில்லை என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.
STAND UP & SALUTE THE CONSISTENCY OF SARFRAZ KHAN 🫡
— Johns. (@CricCrazyJohns) October 2, 2024
- Double Hundred in Irani Cup. pic.twitter.com/cNwDRcpllk
THE UNSTOPPABLE, FROM THE BATTING LEGACY OF MUMBAI:
— Johns. (@CricCrazyJohns) October 2, 2024
- Sarfaraz Khan is an ultimate in domestics...!!!! pic.twitter.com/yOKpOd0jhM
இரானி கோப்பையில் வாசிம் ஜாஃபர் (விதர்பா), ரவி சாஸ்திரி, பிரவீன் ஆம்ரே மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (ரெஸ்ட் ஆப் இந்தியா) இரட்டை சதம் அடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.