Sarfraz Khan | Sunil Gavaskar: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது முடிவடைந்துள்ளது. இந்த தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
அதிரடி
இந்நிலையில், இந்த தொடரில் அறிமுகமான சர்பராஸ் கான் அதிரடியாக விளையாடி அசத்தினார். ராஜ்கோட்டில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் அறிமுகமான அவர் அந்தப் போட்டியில் அதிரடியாக அரைசதம் அடித்தார். இந்த தொடரில் அவர் மொத்தமாக 6 இன்னிங்சில் 70.33 சராசரியில் 211 ரன்கள் எடுத்தார்.
கடிந்து கொண்ட ஜாம்பவான்
இந்நிலையில், தர்மசாலாவில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில் தேநீர் இடைவேளைக்குப் பிறகு, சர்பராஸ் கான் தனது விக்கெட்டை சுலபமாக பறிகொடுத்தார். இதனை வர்ணனையில் பெட்டியில் இருந்து கவனித்த இந்திய அணியின் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் கடும் கோபமடைந்தார்.
இந்தப் போட்டியில் தேநீர் இடைவேளைக்கு முன்னர் 56 ரன்கள் எடுத்த சர்பராஸ் சிறப்பாக இருந்தார். அவரது ஆட்டத்தைப் பார்க்கையில் அவர் சதம் விளாசும் வீரர் போல் காட்சியளித்தார். ஆனால், தேநீர் இடைவேளைக்குப் பின் களம் புகுந்த அவர், தான் சந்தித்த முதல் பந்தை நேராக கட் ஷாட் அடித்தார். சுழற்பந்து வீச்சாளர் ஷோயப் பஷீர் வீசிய அந்த பந்து அவர் பேட்டில் எட்ஜ் ஆகி, ஸ்லிப்பில் இருந்த ஜோ ரூட் லாவகமாக கேட்ச் பிடித்தார்.
அந்த நேரத்தில் வர்ணனை செய்து கொண்டிருந்த, பேட்டிங் ஜாம்பவான் கவாஸ்கர் சர்பராஸின் ஷாட்-செலக்ஷன் குறித்து கடுமையாக கடிந்துகொண்டார். "பந்து பிட்ச் அப் ஆனது, அந்த ஷாட்டுக்கு பந்தில் போதுமான பவுன்ஸ் இல்லை. அந்த பந்துக்கு அவர் தனது விக்கெட்டை விலை கொடுத்துவிட்டார். அதாவது நீங்கள் தேநீருக்குப் பிறகு முதல் பந்தை விளையாடுகிறீர்கள். அதனால், நீங்கள் சந்திக்கும் முதல் பந்துக்கு அதிக கவனம் கொடுக்க வேண்டும். என்று கூறினார்.
தொடர்ந்து புகழ்பெற்ற சர் டான் பிராட்மேன் ஒருமுறை தன்னிடம் கூறியதை கவாஸ்கர் பகிர்ந்து கொண்டார். "டான் பிராட்மேன் என்னிடம், 'நான் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பந்தின் போதும், நான் 200 ரன்களில் இருந்தாலும் சரி, நான் பூஜ்ஜியத்தில் இருப்பதாகவே நினைப்பேன். ஆனால், இங்கே அவர் (சர்பராஸ் கான்), அமர்வின் முதல் பந்தில் மோசமான ஷாட்டை விளையாடுகிறார்." என்று சுனில் கவாஸ்கர் கோபித்துக் கொண்டார்.
மன்னிப்பு கேட்ட சர்பராஸ்
இந்த நிலையில், ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கரின் வார்த்தைகளால் மனமுடைந்த சர்பராஸ் கான் அவரிடம் மன்னிப்பு கோரியுள்ளார். துபாயைச் சேர்ந்த தொழிலதிபரும், இருவருக்கும் பொதுவான நண்பருமான ஷியாம் பாட்டியாவிடம் சர்பராஸ் கான், "சார், தயவு செய்து நான் கவாஸ்கர் அவர்களிடம் மன்னிப்பு கேட்டதாக கூறுங்கள். நான் தவறு செய்துவிட்டேன். அந்த தவறை மீண்டும் செய்ய மாட்டேன்," என்று அவர் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“