Ranji Trophy | Sarfraz Khan: 89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் விதர்பா, கர்நாடகா, மும்பை, பரோடா, தமிழ்நாடு, சவுராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஆந்திரா உள்ளிட்ட 8 அணிகள் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறின.
இந்நிலையில், ரஞ்சி கோப்பை தொடரின் கால் இறுதி ஆட்டங்கள் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், மும்பையில் நடந்து வரும் 2வது கால் இறுதிப் போட்டியில் மும்பை - பரோடா அணிகள் மோதி வருகின்றன. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி முதல் இன்னிங்சில் 384 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. இதனையடுத்து, பரோடா அணி அதன் முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது.
சாதனை படைத்த முஷீர் கான்
இந்த நிலையில், மும்பை அணி தரப்பில் தனது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய முஷீர் கான் இரட்டை சதம் விளாசி அசத்தினார். 357 பந்துகளை எதிர்கொண்ட அவர் 18 பவுண்டரிகளை விரட்டி 203 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
மும்பை அணி ஒரு கட்டத்தில் நான்கு விக்கெட்டுக்கு 99 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இந்த இக்கட்டான கட்டத்தில் களமிறங்கிய முஷீர் கான் தனது அணி 384 ரன்கள் குவிக்க உதவினார்.
முஷீர் கான் இரட்டை சதம் விளாசியதன் மூலம், 18 வயது 362 நாட்களில், ரஞ்சி டிராபியில் இரட்டை சதம் அடித்த இரண்டாவது மும்பையின் இளம் வீரர் என்கிற பெருமையைப் பெற்றார். முன்னதாக, 1996-97 ரஞ்சி டிராபி சீசனில் சவுராஷ்டிராவுக்கு எதிராக 18 வயது, 262 நாட்களில் வாசிம் ஜாஃபர் இரட்டை சதம் அடித்திருந்தார்.
இளம் வயதிலே சாதனையை நாயனாக உருவெடுத்துள்ள முஷீர் கான், தற்போது இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் சர்ஃபராஸ் கானின் சகோதரர் ஆவார். அண்மையில் தென் ஆப்ரிக்காவில் நடந்து முடிந்த ஜூனியர் உலக் கோப்பையில் முஷீர் கான் இந்தியாவுக்காக விளையாடி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Ranji Trophy: Musheer Khan hits record-breaking maiden double hundred for Mumbai in quarterfinals
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“