Dinesh Karthik | Sarfraz Khan: நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பிறகு, இந்தியா - இங்கிலாந்து அணிகள் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் மோதிய 3வது டெஸ்ட் போட்டியில், இந்திய டெஸ்ட் அணியில் சர்ஃபராஸ் கானுக்கு வாய்ப்பு கிடைத்தது. அவரைப் போலவே உள்ளூர் டெஸ்ட் தொடரில் சிறப்பாக ரன்களை குவித்து வரும் தமிழக பேட்ஸ்மேன் பாபா இந்திரஜித்துக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.
பாபா இந்திரஜித்தின் பேட்டிங் சராசரி 77க்கும் மேல் உள்ளது. ஆனாலும் இந்தியா ஏ அணியில் கூட அவருக்கு இடம் அளிக்கப்படவில்லை என இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் வேதனை தெரிவித்துள்ளார். மேலும் அவர் பாபா இந்திரஜித்தின் கடந்த கால கிரிக்கெட் செயல்பாடுகள் குறித்த தரவுகளையும் அவர் பகிர்ந்துள்ளார்.
சர்ஃபராஸ் கானின் முதல் தர டெஸ்ட் போட்டி பேட்டிங் சராசரி 69 ஆக உள்ள நிலையில், தமிழக வீரர் பாபா இந்திரஜித்தின் பேட்டிங் சராசரி 52 ஆக உள்ளது. ஆனாலும் அவர் கடந்த 7 வருட ரஞ்சி கோப்பை தொடர்களில் சிறப்பாகவே செயல்பட்டுள்ளார். எந்தவொரு சீசனிலும் அவரது பேட்டிங் சராசரி 50க்கு கீழ் செல்லவில்லை. அந்த அளவுக்கு நிலையான பேட்ஸ்மேனாக ரஞ்சி கோப்பையில் தொடரில் முத்திரை பதித்து இருக்கிறார். ஆனால், அவருக்கு இந்தியா ஏ அணியில் கூட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
"சர்ஃபராஸ் கான் தனது அறிமுகப் போட்டியில் சிறப்பாக விளையாடிய நிலையில், நான் பாபா இந்திரஜித்துக்காக ஏங்குகிறேன். அவரது கடந்த சில ரஞ்சி ட்ராபி சீசங்களை பாருங்கள்:-
2016 - 697 ரன்கள் - பேட்டிங் சராசரி 63.4, 2 சதம், 5 அரைசதம்
2017 - 405 ரன்கள் - பேட்டிங் சராசரி 58, 1 சதம், 2 அரைசதம்
2018 - 641 ரன்கள் - பேட்டிங் சராசரி 58.3, 2 சதம், 4 அரைசதம்
2019 - 89 ரன்கள் - பேட்டிங் சராசரி 44.5, 1 அரைசதம் (காயத்தால் தொடரில் விலகினார்)
2021 - 396 ரன்கள் - பேட்டிங் சராசரி 99, 3 சதம், 1 அரைசதம்
2022 - 505 ரன்கள் - பேட்டிங் சராசரி 50.5, 1 சதம், 3 அரைசதம்
இந்த ஆண்டையும் சேர்த்து ஏழு ஆண்டுகளாக இத்தகைய சிறப்பான செயல்பாட்டை அவர் வெளிப்படுத்தி இருக்கிறார். அவர் இந்தியா ஏ அணியில் விரைவில் தேர்வு செய்யப்படுவார் என நான் நம்புகிறேன். இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என்றே நான் சொல்ல விரும்புகிறேன். ஆனால், நான் உறுதியாக சொல்கிறேன். அவர் இந்தியா ஏ அணியில் தேர்வு செய்யப்பட்டால் ரன் குவித்து இந்திய அணியில் இடம் பெறுவார். இந்த சீசனில் அவர் பேட்டிங் சராசரி 77 ஆக உள்ளது." என்று தினேஷ் கார்த்திக் அந்தப் பதிவில் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“