இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் கடந்த புதன்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. புதன்கிழமையன்று மைதானம் இருக்கும் பகுதியில் மழை வெளுத்து வாங்கிய நிலையில், முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.
இதனையடுத்து, மறுநாள் வியாழக்கிழமை 2-ம் நாளில் போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதல் இன்னிங்சில் 46 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. தொடர்ந்து முதல் இன்னிங்சில் ஆடிய நியூசிலாந்து 402 ரன்கள் எடுத்தது. தற்போது 2வது இன்னிங்சில் ஆடி வரும் இந்திய அணி 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 49 ஓவர்களில் 3 விக்கெட்டை இழந்து 231 ரன்கள் எடுத்து நியூசிலாந்தை விட 125 ரன்கள் பின்னிலையில் இருந்தது. இந்தியா தரப்பில் சர்பராஸ் கான் 70 ரன்னுடன் களத்தில் இருந்தார்.
இந்த நிலையில், இன்று சனிக்கிழமை 4-ம் நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. களத்தில் இருந்த சர்பராஸ் கான் அடுத்த வந்த ரிஷிப் பண்ட்டுடன் ஜோடி அமைத்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இதில் சர்பராஸ் கான் 133 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் அவர் விளாசும் முதல் சதம் இதுவாகும். அவர் 113 பந்துகளில் 13 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் சதம் அடித்தார்.
மும்பையைச் சேர்ந்த சர்பராஸ் கானுக்கு, இது 16-வது முதல் தர போட்டி சதமாகும். தொடர்ந்து அவர் விளாசும் இரண்டாவது சதமும் ஆகும். அவர் சமீபத்தில் முடிவடைந்த வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை தவறவிட்ட நிலையில், இந்த மாத தொடக்கத்தில் லக்னோவில் டையில் முடிந்த ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கு எதிரான இரானி கோப்பை போட்டியில், மும்பை அணிக்காக சர்பராஸ் கான் இரட்டை சதம் விளாசினார். இதன் மூலம், இரானி கோப்பையில் இரட்டை சதம் அடித்த முதல் மும்பை வீரர் என்ற பெருமையை சர்பராஸ் பெற்றார்.
மேலும், நம்பர் 4 இடத்தில் சதம் அடித்த 7-வது இந்திய வீரர் என்கிற பெருமையையும் சர்பராஸ் கான் பெற்றுள்ளார். இந்தப் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர், கோஹ்லி, ராகுல் டிராவிட், விவிஎஸ் லக்ஷ்மண், சவுரவ் கங்குலி மற்றும் அஜிங்க்யா ரஹானே ஆகியோர் உள்ளனர்.
THE ROAR OF SARFRAZ KHAN 🐯🌟 pic.twitter.com/IMYx3NTp9m
— Johns. (@CricCrazyJohns) October 19, 2024
பல வருட போராட்டங்களுக்கு பிறகு, சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக ராஜ்கோட்டில் தனது டெஸ்ட் அறிமுகத்தைப் பெற்ற சர்பராஸ் இரண்டு அரை சதங்களை அடித்து அசத்தினார். பின்னர், தர்மசாலா டெஸ்டில் மற்றொரு அரைசதத்தை விளாசினார். இந்தத் தொடரை இந்தியா 3-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.
சுவாரசியமாக, சர்பராஸ் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இதுவரை அடித்த அரைசதங்களை விட முதல் தர சதங்கள் (14) அதிகம். அவரது முதல் தர போட்டி சராசரி தற்போது 52 போட்டிகளில் விளையாடி 69.56* என உள்ளது. பெரிய சதங்களை அடிப்பற்காக அறியப்பட்ட சர்பராஸ், இந்த 15 சதங்களில் 10ஐ 150-க்கும் அதிகமான ஸ்கோராக மாற்றியுள்ளார், அவற்றில் நான்கு இரட்டை சதங்கள் ஆகும். சர்பராஸ் 2019-20 ரஞ்சி டிராபி போட்டியில் மும்பை அணிக்காக 301 ரன்களை எடுத்து, தனது அதிகபட்ச ஸ்கோரை எட்டினார் என்பதும் குறிப்பித்தக்கது.
CELEBRATION BY SARFARAZ KHAN WHEN HE COMPLETED THE MAIDEN HUNDRED 🥶 pic.twitter.com/PsbxlNya0t
— Johns. (@CricCrazyJohns) October 19, 2024
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், சர்பராஸ் கானுடன் ஜோடி அமைத்திருக்கும் ரிஷப் பண்ட் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். இருவரும் தங்களது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் சூழலில், இந்திய அணி ஸ்கோர் விறுவிறுவென எகிறி வருகிறது. 71 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 344 ரன்கள் எடுத்து, நியூசிலாந்தை விட 12 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருக்கிறது. இதனிடையே, ஆட்டத்தில் மழை குறுக்கீடு செய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இந்திய அணிக்கான உணவு இடைவேளையும் விடப்பட்டுள்ளது. சர்பராஸ் கான் 125 ரன்களுடனும், பண்ட் 25 ரன்களுடனும் களத்தில் உள்ளார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.