Sarfraz Khan | Kolkata Knight Riders: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் அறிமுகமானார் சர்பராஸ் கான். கடந்த 5 ஆண்டுகளுக்கு மேல் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி அவரின் நீண்ட நாள் கனவு ராஜ்கோட் டெஸ்டில் நனவானது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அதிரடியாக விளையாடி சர்பராஸ் கான், அறிமுக போட்டியிலே அரைசதம் அடித்து அசத்தினார். அவர் முதல் இன்னிங்சில் 66 பந்துகளில் 62 ரன்களும், 2வது இன்னிங்சில் 72 பந்துகளில் 68 ரன்களும் எடுத்து தனது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.
கே.கே.ஆர் அணியில் சர்பராஸ் கான்?
இந்நிலையில், மார்ச் 22 ஆம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படும், 2024 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கே.கே.ஆர்) அணியில் அதிரடி வீரரான சர்பராஸ் கான் இணைய உள்ளார் என்கிற தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேற்கு வங்கத்தின் பிரபல நாளிதழான ஆனந்தபஜார் பத்ரிகா வெளியிடப்பட்டுள்ள செய்தியில், சமீபத்திய ஐ.பி.எல் 2024 ஏலத்தில் விற்கப்படாமல் போன சர்பராஸ் கான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இணைய உள்ளார் என்றும், அவரை அணியில் சேர்க்க கே.கே.ஆர் அணியின் வழிகாட்டி கவுதம் கம்பீர் அறிவுறுத்தியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளது.
இதற்கு முன் பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளில் விளையாடிய சர்பராஸ், 2015ல் ஐ.பி.எல் அறிமுகமானார். இருப்பினும், ஐ.பி.எல் 2023ல் குறிப்பிடத்தக்க தாக்கத்தை அவரால் ஏற்படுத்த முடியவில்லை. அவர் விளையாடி 4 இன்னிங்ஸ்களில் 13.25 என்ற சராசரியில் 53 ரன்கள் எடுத்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 85.48 ஆக உள்ளது. மொத்தத்தில், அவர் 22.5 சராசரியில் மற்றும் 130.58 ஸ்டிரைக் ரேட்டுடன், 50 ஐ.பி.எல் போட்டிகளில் 585 ரன்கள் எடுத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“