33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த 28 ஆம் தேதி முதல் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்திய தரப்பில் 117 வீரர் - வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.
தற்போது இறுதிகட்டத்தை எட்டியிருக்கும் இந்த ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில், ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி நேற்று இரவு 11:55 மணிக்கு தொடங்கி அதிகாலை 1 மணி வரை நடைபெற்றது. மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஈட்டி எறிதலில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தைத் தட்டிச்சென்றார்.
கடந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்தியாவின் நீரஜ் சோப்ரா, அதிகபட்சமாக 89.45 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். கரீபியனின் கிரெனடா நாட்டைச் சேர்ந்த ஆண்டர்சன் பீட்டர் 88.54 மீட்டர் தூரம் எறிந்து மூன்றாம் இடம் பிடித்து வெண்கலம் வென்றார்.
நீரஜ் சோப்ரா தாயார் நெகிழ்ச்சி
இந்நிலையில், இந்திய வீரர் நீரஜ் சோப்ராவின் தாயார் சரோஜ் தேவி, தனது மகனின் வெள்ளி பதக்கம் தங்கம் பதக்கம் போன்றது என்றும், தங்கப் பதக்கம் வென்ற பாகிஸ்தானின் அர்ஷத் நதீமும் தனது மகன் தான் என்றும் கூறியுள்ளார். இது பற்றி நீரஜ் சோப்ராவின் தாயார் சரோஜ் தேவி பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசுகையில், "நீரஜ் வெள்ளி பதக்கம் வென்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. வெள்ளியும் தங்கம்தான். தங்கப்பதக்கம் வென்ற அந்த வீரரும் (அர்ஷத் நதீம்) எனது குழந்தை தான். அங்கு செல்லும் அனைவரும் கடினமாக உழைக்கிறார்கள்" என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“