இந்திய கிரிக்கெட் அணியில் தனது லெக் ஸ்பின் பந்துவீச்சால் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களை எல்லாம் திணறடித்த, அனில் கும்ப்ளே ஆரம்ப காலத்தில் ஒரு கேட்ச்சை பிடிக்காமல் கோட்டை விட்டதற்காக அழும் அளவுக்கு ஒரு ஜாம்பவான் வீரர் திட்டிய ஃப்ளாஷ்பேக் வெளியாகி உள்ளது.
இந்திய பந்துவீச்சாளர்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தவர் மாயாஜால லெக்ஸ்பின்னர், அனில் கும்ப்ளே. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த அனில் கும்ப்ளே இந்திய கிரிக்கெட் அணியில் பல சாதனைகளைப் படைத்துள்ளார்.
இன்ஜினியரிங் படித்திருந்த அனில் கும்ப்ளே, கிரிக்கெட் மீதான ஆர்வத்தால், உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி, 1990இல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். இவருடைய துல்லியமான லெக்ஸ்பின் பல தலை சிறந்த பேட்ஸ்மேன்களை திணறடித்தது. இந்தியாவுக்கு பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார்.
அனில் கும்ப்ளே 18 வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவின் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளராக ஜொலித்தார். அனில் கும்ப்ளே ஓய்வு பெறும்போது கேப்டனாகும் அளவுக்கு அனுபவமும் வளர்ச்சியையும் பெற்றிருந்தார்.
அனில் கும்ப்ளே டெஸ்ட் கிரிக்கெட்டில் 619 விக்கெட்டுகளையும் ஒருநாள் கிரிக்கெட்டில் 337 விக்கெட்டுகளையும் எடுத்து அந்த 2 வகையான கிரிக்கெட்டிலும் 956 விக்கெட்டுகளை எடுத்து சர்வதேச கிரிக்கெட்டில் சாதனை படைத்துள்ளார். உலக அளவில் அதிக விக்கெட்டுகள் எடுத்த 3வது பவுலராகவும் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அனில் கும்ப்ளே ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தியது இன்றைக்கும் உற்சாகமாக நினைவுகூரப்படுகிறது.
1999இல் டெல்லியில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகள் எடுத்த ஆசிய பந்து வீச்சாளராக சாதனை படைத்தார். அனில் கும்ப்ளேவுக்கு பிறகு வந்த ஸ்பின்னர்கள் ஹர்பஜன் சிங், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் ஆஃப் ஸ்பின்னர்கள்தான். அவரைப்போல, இன்னும்கூட ஒரு லெக் ஸ்பின்னர் இந்திய அணியில் இல்லை.
இப்படி பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக ஜாம்பவானாக திகழ்ந்த அனில் கும்ப்ளே, கிரிக்கெட்டி ஆரம்ப காலத்தில் மிகவும் தடுமாறினார். நல்ல உயரமான தோற்றம் கொண்ட அனில் கும்ப்ளே பந்தை பெரிய அளவில் சுழற்ற மாட்டார் என்று நினைத்து அவரை இந்திய அணியில் தேர்வு செய்யும்போது நிறைய எதிர்ப்புகள் எழுந்தன.
அதற்கேற்றார் போல, அனில் கும்ப்ளே அறிமுகமான முதல் 2 வருடங்களில் சுமாராக பந்து வீசினார். 1992இல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக் கோப்பையில் அவரை தேர்வுக்குழு தேர்வு செய்யவில்லை.
ஆனாலும், மனம் தளராத அனில் கும்ப்ளே, துல்லியமாகவும் வேகமாகவும் வேரியேஷனை காட்டி லெக்ஸ்பின் வீசி விக்கெட்டுகளை அள்ளத் தொடங்கினார்.
அதற்கு பிறகு, ஏறுமுகம் கண்ட அனில் கும்ப்ளே இந்தியாவின் லெக்ஸ்பின் ஜாம்பவானாக திகழ்ந்தார். இப்படியான வீரராக உருவெடுத்த அனில் கும்ப்ளெ அறிமுக போட்டியில், ஒரு கேட்ச்சை பிடிக்காமல் கோட்டை விட்டதற்காக கண்ணீர் விட்டு அழும் அளவுக்கு இந்திய அணியின் ஜாம்பவான் கபில் தேவ் திட்டியதாக முன்னாள் இந்திய வீரர் பிஷன் சிங் பேடி ஒரு ஃப்ளாஷ் பேக்கை பகிர்ந்துள்ளார்.
கடந்த 1990இல் ஓல்டு ட்ராபோர்டு மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அறிமுகமான அனில் கும்ப்ளே ஆலன் லம்ப் கொடுத்த எளிதான கேட்ச்சை கோட்டை விட்டார். பொதுவாகவே அறிமுகப் போட்டியில் அனைத்து வீரர்களும் தடுமாறுவார்கள் என்ற அடிப்படையில் அந்த தவறை செய்ததற்காக கபில் தேவ் கடுமையாக திட்டியதாக பிஷன் சிங் பேடி கூறியுள்ளார்.
அந்த கேட்சை அவர் பிடித்திருந்தால் அந்த சமயத்தில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பவுலராக சாதனை படைத்திருந்த ரிச்சர்ட் ஹேட்லியின் உலக சாதனையை உடைத்திருக்க முடியும் என்பதே அவரின் கோபத்திற்கு காரணமாகும். அப்படி அறிமுக போட்டியிலேயே கண்ணீர் விடும் அளவுக்கு கஷ்டத்தை எதிர்கொண்ட காரணத்தாலேயே நாளடைவில் அனில் கும்ப்ளே ஜாம்பவானாக உருவெடுத்ததாகவும் பிஷன் சிங் பேடி பாராட்டியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.
“அது அவரின் அறிமுக டெஸ்ட் போட்டியாகும். ஓல்ட் ட்ராபோர்ட் மைதானத்தில் நடந்த அப்போட்டியின் போது நான் இந்திய அணியின் மேனேஜராக செயல்பட்டேன். அப்போது ஒரு கேட்சை விட்டதற்காக கும்ப்ளேவை களத்திலேயே கபில் தேவ் கடுமையாக திட்டினார். அப்போட்டி அவருக்கு அறிமுகம் என்றாலும் கபில் தேவ் 100 போட்டிகளுக்கு மேல் விளையாடி சீனியராக இருந்தார். ஆனால் அன்றைய நாளின் முடிவில் உடைமாற்றும் அறைக்கு நான் செல்லும் போது அனில் கும்ப்ளே அங்கு அழுது கொண்டிருப்பதை பார்த்தேன். என்னைக் கேட்டால் அந்தத் தருணம்தான் அவரை மேலும் மனதளவில் வலுவானவராக மாற்றியது. அந்தத் தருணத்தில் அவர் கண்ணீர் விட்டது மிகவும் முக்கியமானதாகும். அந்த தருணத்தில் தாம் சுமாராக செயல்படுகிறோம் என்று நினைத்ததாலேயே நாளடைவில் அவர் இந்தளவுக்கு வளர்ந்துள்ளார்” எனக்கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.