Ipl-cricket | chennai-super-kings | ben-stokes: 17-வது ஐ.பி.எல் (2024) டி20 கிரிக்கெட் தொடர் அடுத்தாண்டு நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த தொடருக்கான மினி ஏலம் வருகிற டிசம்பர் 19ம் தேதி துபாயில் நடைபெற உள்ளது. இதையொட்டி, தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் நவம்பர் 15 ஆம் தேதிக்குள் விடுவிக்கப்படும் மற்றும் தக்கவைக்கப்படும் பட்டியலை பட்டியலை வருகிற 26ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல் 2023 சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்திய எம்.எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 5வது முறையாக கோப்பையை வாகை சூடியது. இதன்மூலம் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் சாதனையை சமன் செய்தது.
ஸ்டோக்ஸை விடுவிக்க முடிவு
இந்நிலையில், நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த மினி ஏலத்திற்கு முன்பாக இங்கிலாந்தின் நட்சத்திர ஆல்- ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை விடுவிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற வீரர்கள் ஏலத்தில் சென்னை நிர்வாகம் ரூ. 16.25 கோடி என்ற பிரம்மாண்ட தொகையில் ஸ்டோக்ஸை வாங்கியது.
ஸ்டோக்ஸ் முழங்கால் காயத்தால் அவதிப்பட்ட நிலையில், அவர் கடந்த சீசனில் ஓரிரு போட்டிகளில் மட்டுமே விளையாடி இருந்தார். தற்போது இந்திய மண்ணில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் கூட ஸ்டோக்ஸ் ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாடினார். ஆல் ரவுண்டரான அவர் பந்துவீசவில்லை.
கால்முட்டி காயத்துக்கு விரைவில் அறுவை சிகிச்சை செய்ய உள்ள அவர் அடுத்த 2 - 3 மாதங்களுக்கு விளையாட மாட்டார் என்பதால் 2024 சீசனிலும் விளையாடுவது சந்தேகம். அதனால் அவரை விடுவிக்க சென்னை அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகக்கோப்பை தொடரில் இருந்து இங்கிலாந்து அணி வெளியேறிய நிலையில், சென்னை அணி நிர்வாகிகள் இன்னும் ஸ்டாக்ஸை நேரடியாக தொடர்பு கொள்ளவில்லை. அவரது மேலாளருடனான பேச்சு வார்த்தைகளும் இன்னும் முடிவடைந்த படிவில்லை.
"ஸ்டோக்ஸ் ஒரு பெரிய மேட்ச் பிளேயர் என்பதால், ஸ்டோக்ஸை விடுவிப்பது குறித்து நாங்கள் பரிசீலிக்க மாட்டோம். மேலும் நாங்கள் அவரை மிகவும் மதிக்கிறோம். ஆனால் அவரால் சீசனுக்கு வர முடியாவிட்டால், ரூ.16 கோடியில் சில தரமான வீரர்களை வாங்க முடிவு செய்வோம்" என்று சென்னை அணி நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.
லாக்கி பெர்குசனை விடுவிக்கும் கொல்கத்தா
நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளரான லாக்கி பெர்குசனை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விடுவிடுக்க உள்ளது. அவருக்கு அடிக்கடி காயம் ஏற்பட்டு வருவதை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
லாக்கி பெர்குசன் 2022ல் குஜராத் டைட்டன்ஸ் அணியால் ரூ.10 கோடிக்கு வாங்கப்பட்டார். ஆனால் பின்னர் இந்த ஆண்டு கொல்கத்தா அணிக்கு டிரேடு செய்யப்பட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
ipl
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.