13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் வருகிற அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்கான தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இப்போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கிறது.
இந்த ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி அதன் முதல் ஆட்டத்தில் (அக்டோபர் 8-ம் தேதி) ஆஸ்திரேலியாவை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து எதிர்கொள்கிறது. அதே நேரத்தில், ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அக்டோபர் 15-ம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.
பாக்,. வீரர் ஓபன் டாக்
இந்நிலையில், கிரிக்கெட்டில் பரம எதிரியான இந்தியாவை வீழ்த்துவதை விட கோப்பையை வெல்வதே முக்கியம் என்று பாகிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் வீரர் ஷதாப் கான் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் பாகிஸ்தான் இணையத்தளத்துக்கு ஷதாப் கான் அளித்துள்ள பேட்டியில், “இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது வித்தியாசமான மகிழ்ச்சியைத் தருகிறது. அப்போது இருக்கும் ஒட்டுமொத்த அழுத்தமும் வேறுபட்டது. இப்போது நாம் அங்கு செல்ல வேண்டியிருக்கும் போது, அது அவர்களின் சொந்த மைதானமாக இருக்கும். ரசிகர்களின் கூட்டம் நமக்கு எதிராக இருக்கும்.
இருப்பினும், நாங்கள் உலகக் கோப்பையில் விளையாடுவதற்கு அங்கு செல்கிறோம். எனவே இந்தியாவைப் பற்றி மட்டுமல்ல, அதைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். ஏனென்றால் இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெற்று உலகக் கோப்பையை இழந்தால் அதனால் எந்தப் பலனும் இல்லை.
எனது கருத்துப்படி, நாங்கள் இந்தியாவிடம் தோற்று, உலகக் கோப்பையை வென்றால், அது வெற்றி-வெற்றி சூழல் தான். ஏனெனில் அதுவே எங்களின் முக்கிய நோக்கம்." என்று அவர் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இரு நாடுகளுக்கும் இடையேயான அரசியல் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், இந்தியாவுக்குச் செல்வதற்கான அரசின் அனுமதியை இன்னும் பெறவில்லை. ஆகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் ஆசியக் கோப்பைக்காக பாகிஸ்தானுக்குச் செல்ல இந்தியா மறுத்துவிட்டது. அதற்குப் பதிலாக தனது அனைத்து போட்டிகளையும் இந்தியா இலங்கையில் விளையாடுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.