பாகிஸ்தான் சென்றுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், ராவல்பிண்டியில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி பாகிஸ்தானை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்தது. இந்த அபார வெற்றி மூலம் தொடரில் வங்கதேசம் 1 - 0 என்கிற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Pakistan drop Shaheen Afridi for second Test against Bangladesh
இந்நிலையில், பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30 - செப்டம்பர் 03) முதல் தொடங்கி நடைபெற உள்ளது. இந்த நிலையில், இந்த போட்டிக்கான பாகிஸ்தான் அணி இன்று (வியாழக்கிழமை) அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் இருந்து முன்னணி வேகப்பந்துவீச்சாளர் ஷஹீன் அப்ரிடி கழற்றி விடப்பட்டுள்ளார்.
முதலாவது போட்டியில் அடைந்த தோல்வியைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், அது மோதலாக முடிந்ததாகவும் கூறப்படுகிறது. பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூதை வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அப்ரிடி திட்டியதாகவும் கூறப்படுகிறது. அத்துடன், இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டதாகவும், அதனை விக்கெட் கீப்பர் வீரர் முகமது ரிஸ்வான் தடுக்க வந்த போது, ஷாகின் அப்ரிடி அவரை தள்ளி விட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகத் தான் ஷஹீன் அப்ரிடி 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், ஷாகின் அப்ரிடி பந்துவீச்சில் சில குறைகள் இருப்பதால் அதனை நிவர்த்தி செய்வதற்காகவே பயிற்சி செய்யப் போகிறார் என்று பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜேசன் கில்லஸ்பி கூறியுள்ளார். மேலும் ஷாகின் அப்ரிடிக்கு தற்போது தான் குழந்தை பிறந்திருப்பதால் அவர் குழந்தையுடனும் நேரம் செலவிட வேண்டும் என்பதற்காக தாங்கள் நேரம் ஒதுக்கி கொடுத்திருப்பதாகவும் கில்லஸ்பி கூறியுள்ளார்.
இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணி வீரர்கள் பட்டியல்:
ஷான் மசூத் (கேப்டன்), சவுத் ஷகீல் (விக்கெட் கீப்பர்), அப்ரார் அகமது, முகமது அலி, சல்மான் அலி ஆகா, சைம் அயூப், பாபர் ஆசம், மிர் ஹம்சா, முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), அப்துல்லா ஷபீக், நசீம் ஷா, குர்ரம் ஷெஹ்சாத்.