ஆல்ப்ஸ் மலைத்தொடரில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில், செல்ஃபி எடுக்கும்போது ரசிகை ஒருவரிடம் இந்திய தேசியக் கொடியை உயர்த்தி, முறையாக பிடிக்குமாறு அறிவுறுத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவருடைய இந்த செய்கையை இந்திய ரசிகர்கள் உட்பட பலரும் எல்லை கடந்து பாராட்டி வருகின்றனர்.
கிரிக்கெட் போட்டிகளை பிரபலப்படுத்தும் நோக்கில் சேவாக், அஃப்ரிடி உள்ளிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்ற டி-20 போட்டி சுவிட்சர்லாந்தில் உள்ள ஆல்ப்ஸ் மலைத்தொடரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், அஃப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது.
இந்த போட்டியில் சோயிப் அக்தர், வீரேந்தர் சேவாக், சாஹிர் கான், கிரேம் ஸ்மித், ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், லஸித் மலிங்கா, மகிளா ஜெயவர்த்தனே உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில், போட்டி நிறைவுற்ற பிறகு, திரண்டிருந்த ரசிகர்கள் வீரர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். அப்போது, ரசிகை ஒருவர் இந்திய தேசியக் கொடியை முறையாக பிடிக்காமல் அஃப்ரிடியுடன் செல்ஃபி எடுக்க முயன்றார். அதற்கு, “தேசிய கொடியை முறையாக உயர்த்திப் பிடியுங்கள்”, எனக்கூறி அதற்கு பின் செல்ஃபி எடுத்துக்கொண்டார் அஃப்ரிடி.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பாகிஸ்தான் வீரர், இந்திய தேசியக் கொடிக்கு மரியாதை செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.