Shahid-afridi | indian-cricket-team: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்னை சேப்பாக்கத்தில் நடந்த 5வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி பெற்றது. தற்போது இந்திய அணி வருகிற புதன்கிழமை அடுத்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை சந்திக்க டெல்லி சென்றுள்ளது.
இந்நிலையில், முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ஷாகித் அப்ரிடி, இந்திய பந்துவீச்சாளர்கள் இப்போது மாமிசம் சாப்பிடுவதால் தான் வலிமையானவர்களாகிவிட்டனர் என்று கூறி பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறார்.
உள்ளூர் விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அப்ரிடி, “இந்தியாவில் 1.4 பில்லியன் மக்கள் தொகை உள்ளது. அங்கு கிரிக்கெட்டின் தரம் மாறிவிட்டது. பாகிஸ்தான் நல்ல பந்துவீச்சாளர்களை உருவாக்கும் போது அவர்கள் சிறந்த பேட்டர்களை உருவாக்குகிறார்கள் என்று நாம் அப்போது கூறினோம். ஆனால் அது அப்படி இல்லை. நாம் நல்ல பந்து வீச்சாளர்கள் மற்றும் பேட்டர்களை உருவாக்கி வருகிறோம். இருப்பினும், அவர்களின் பந்துவீச்சாளர்கள் இப்போது மாமிசம் சாப்பிடத் தொடங்கியுள்ளனர், எனவே அவர்கள் வலிமை பெற்றுள்ளனர்." என்று கூறியுள்ளார்.
இது தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அப்ரிடியின் பேச்சுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிலடி கொடுத்து வருகிறார்கள். சிலர் பாகிஸ்தான் அணியையும் ஒப்பிட்டு அப்ரிடியை வறுத்தெடுத்து வருகிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“