Shahid Afridi Tamil News: 2023 ஆம் ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில் நடக்கிறது. இதற்கான வரைவு அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சர்வதேச கிரிக்கெட் வாரியத்துடன் (ஐ.சி.சி) பகிர்ந்து கொண்டது. இதன்படி, கிரிக்கெட்டில் பரம போட்டியாளர்களான இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி அக்டோபர் 15 ஆம் தேதி குஜராத் அகமதாபாத்தின் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இலங்கை, பாகிஸ்தானில் ஆசிய கோப்பை
இதற்கிடையில், 2023ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு ஆசிய கோப்பை தொடரை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் பெற்றிருந்தது. ஆனால் பாகிஸ்தானில் ஆசிய கோப்பை போட்டிகள் நடந்தால் இந்தியா அதில் கலந்து கொள்ளாது என பிசிசிஐ தெரிவித்திருந்தது.
தற்போது ஆசியக் கோப்பை தொடரில் 4 போட்டிகள் பாகிஸ்தானிலும், 9 போட்டிகள் இலங்கையிலும் நடைபெறுவதற்கு பாகிஸ்தான் சம்மதித்திருக்கிறது. ஆசியக் கிரிக்கெட் கவுன்சிலும் இதை ஏற்றுக் கொண்டது.
இதனிடையே, இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஒருநாள் உலகக் கோப்பை போட்டி அகமதாபாத்தில் நடக்கும் என்ற செய்திகள் வெளியாகியது. இதற்கு பாகிஸ்தான் தரப்பிலிருந்து எங்களால் குஜராத்தில் விளையாட முடியாது. தென்னிந்தியாவில் விளையாடவே நாங்கள் விரும்புகிறோம் என்றும் சொல்லப்பட்டது.
பாக்., வாரியத்தை வெளுத்து வாங்கிய அப்ரிடி
இந்த நிலையில், ஒருநாள் உலகக் கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நடக்கும் அகமதாபாத்தில் விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) தயக்கம் காட்டியதற்காக பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி கடுமையாக சாடியுள்ளார். மேலும், நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்தியாவை வீழ்த்துவதே இலக்காக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் உள்ள உள்ளூர் செய்தி சேனலில் பேசிய அப்ரிடி "அவர்கள் ஏன் அகமதாபாத் ஆடுகத்தில் விளையாட மறுக்கிறார்கள்? அது தீயை வீசுகிறதா? அல்லது பேய் இருக்கிறதா? போய் விளையாடு. விளையாடி வெற்றி பெறு.
இவையே முன்னறிவிக்கப்பட்ட சவால்கள் என்றால், அவற்றைக் கடக்க ஒரே வழி விரிவான வெற்றிதான். இறுதியில் முக்கியமானது பாகிஸ்தான் அணியின் வெற்றிதான். இதில் இருக்கின்ற முக்கிய விஷயமே இதுதான். இந்திய அணிக்கு அந்த மைதானம் சாதகமாக இருக்கும் என்றால், நீங்கள் அங்கு சென்று விளையாடி இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் நிரம்பி இருக்கின்ற இடத்தில் வெற்றியை உங்கள் பக்கம் இழுக்க வேண்டும். நீங்கள் வெற்றி பெற்றதை அவர்களுக்குக் காட்ட வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.
பிசிபி தலைவர் பேச்சு
முன்னதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய (பிசிபி) தலைவர் நஜாம் சேத்தி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்தியா-பாகிஸ்தான் உலகக் கோப்பை போட்டியை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட செய்திகளுக்கு பதிலளித்து இருந்தார்.
இதுகுறித்து நமது 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' இதழுக்கு அவர் அளித்த பேட்டியில், "பாகிஸ்தான் விளையாடும் போட்டிஅகமதாபாத்தில் நடக்கிறது என்று கேள்விப்பட்டபோது, நான் சிரித்துக் கொண்டே ‘இந்தியாவுக்கு வராமல் இருக்க இது ஒரு வழி’ என சொன்னேன். அதாவது சென்னை அல்லது கொல்கத்தா என்று நீங்கள் சொன்னால், அது அர்த்தமுள்ளதாக இருக்கும்.
நான் அதன் அரசியலுக்குள் செல்ல விரும்பவில்லை, ஆனால் நிச்சயமாக இதற்கு ஒரு அரசியல் கோணம் இருப்பதாகத் தெரிகிறது. ஏனென்றால் நமக்கு பாதுகாப்பு பிரச்சினைகள் இருக்கக்கூடிய ஒரு நகரம் என்று ஒன்று இருந்தால், அது அகமதாபாத். எனவே, அதைப் பற்றி குறைவாகக் கூறினால், சிறந்தது என்று நான் நினைக்கிறேன்.
இது எங்கள் வழியில் வீசப்பட்ட கவனத்தை சிதறடிக்கும் தகவல் என்ற உணர்வைக் கொடுத்தது, 'நாங்கள் உங்களை அகமதாபாத்தில் விளையாடப் போகிறோம், நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். அகமதாபாத்தை யார் ஆட்சி செய்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்." என்று கூறியிருந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil