உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், சௌதம்ப்டனில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தின் முடிவு என்பது, முதல் நான்கு இடங்களை பிடிப்பதில் தீவிரமாக இருக்கும் அந்த ஒரு அணிக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. அது என்ன அணி என்பதை, இறுதி பத்தியில் சொல்கிறேன். அதற்கு முன்னதாக, நேற்றைய போட்டியை பற்றி பார்த்துவிடுவோம்.
ரோஸ் பௌல் மைதானத்தில் நேற்று நடந்த ஆட்டத்தில் வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான், முதலில் வங்கதேசத்தை பேட்டிங் செய்ய பணித்தது. இந்தியாவுக்கு எதிரான அவர்களது பந்துவீச்சின் தீவிரம், வங்கதேசத்தை முதலில் பேட்டிங் செய்ய வைக்கும் தைரியத்தை ஆப்கன் கேப்டனுக்கு வழங்கியது என்பதில் நமக்கு துளியும் சந்தேகம் வேண்டாம்.
லிட்டன் தாஸ், தமீம் இக்பால் தொடக்க வீரர்களாக களமிறங்கினார்கள். இந்தியாவுக்கு எதிராக முதல் ஓவரை வீசிய, அதே முஜீப் உர் ரஹ்மானை கொண்டே, பந்துவீச்சை தொடங்கினார் ஆப்கன் கேப்டன் நைப். இந்தியாவுக்கு எதிராக ரோஹித்தை குறிவைத்த முஜீப், வங்கதேசத்தில் குறி வைத்தது, வலது கை பேட்ஸ்மேனான லிட்டன் தாஸை. குறி தப்பவில்லை. 17 ரன்களில், முஜீபின் கேரம் பந்தில் கேட்சானார்.
மற்றொரு தொடக்க வீரர், இன்னும் இந்த உலகக் கோப்பையில் தனது சுயரூபத்தை வெளிக் காட்டாமல் அடக்கி வாசித்துக் கொண்டிருக்கும் தமிம் இக்பால், 36 ரன்களில் நபி ஓவரில் போல்டானார்.
இந்த உலகக் கோப்பையை பொறுத்தவரை, வங்கதேசத்தின் மிடில் ஆர்டரை, ஒரு கிரிக்கெட் பேட்டின் மையப் பகுதியுடன் ஒப்பிடலாம். ஆங்கிலத்தின், மிட் ஆஃப் தி பேட் என்பார்கள். பவுலர் யாராக இருந்தாலும், யார் வீசினாலும், எதிர் முனையில் நிற்கும் பேட்ஸ்மேனின் பேட்டின் மையப் பகுதியில் அந்த பந்து படுமாயின், அது எல்லைக் கோட்டிற்கு செல்வதை யாராலும் தடுக்க முடியாது. அதுவே, பேட்டின் முனையில் பட்டால் டாப் எட்ஜ் ஆகும், பேட்டின் அடிப் பகுதியில் பட்டால், வட்டத்தில் கேட்சாகும்.
அப்படிப்பட்ட பலம் வாய்ந்த பேட்டின் மையப் பகுதியைப் போன்று இருக்கிறது வங்கதேச அணியின் மிடில் ஆர்டர். சகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹீம் ஆகியோர் அந்த அளவுக்கு அந்த மிடில் ஆர்டரை ஆழப்படுத்தி வைத்திருக்கின்றனர். அது நேற்றைய போட்டியிலும் தொடர்ந்தது.
சகிப், 69 பந்துகளில் 51 ரன்களும், ரஹீம் 87 பந்துகளில் 83 ரன்களும் எடுத்து அவுட்டானார்கள், சகிப்பை முஜீப் எல்பிடபிள்யூ ஆக்க, ரஹீம் சத்ரான் ஓவரில் கேட்சானார். இறுதிக் கட்டத்தில், மொசடெக் ஹொசைன் 35 ரன்கள் எடுக்க, 50 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட் இழப்பிற்கு, 262 ரன்கள் எடுத்தது வங்கதேசம்.
ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சிலேயே, சர்வ சாதாரணமாக 325 ரன்களைக் கடந்த வங்கதேசத்தால், நேற்று முதல் பேட்டிங் செய்தும், 262 ரன்களே எடுக்க முடிந்தது இங்கு குறிப்பிடப்பட வேண்டிய விஷயம். ஆப்கன் பவுலிங்கில் அவ்வளவு தீவிரம் இருந்தது.
10 ஓவர்கள் வீசிய முஜீப், 39 ரன்கள் விட்டுக் கொடுத்து, 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ரஷித் கான், 10 ஓவர்கள் வீசி 52 ரன்கள் விட்டுக் கொடுத்து விக்கெட் ஏதும் கைப்பற்றவில்லை.
தொடர்ந்து, களமிறங்கிய ஆப்கானிஸ்தான், ஓரளவுக்கு நல்ல தொடக்கத்தைக் கொடுத்தது.முதல் விக்கெட் 47 ரன்களில் விழ, அதன்பிறகு, சீராக விழுந்து கொண்டே இருந்தன. கேப்டன் குல்பாதின் நைப் 47 ரன்களும், ரஹ்மத் ஷா 24 ரன்களும் எடுக்க, இந்தியாவை கடைசி ஓவர் வரை மிரட்டிய முகமது நபி 0 ரன்களில், சகிப் ஓவரில் போல்டானார். தொடக்க வீரர்கள் இருவரையும் வீழ்த்திய சகிப், மொத்தம் 10 ஓவர்கள் வீசி, 29 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார்.
ஆப்கனின் அஸ்திவாரம், பில்டிங்கை தாங்கும் தூண், சீலிங் என டாப் முதல் லோ ஆர்டர் வரை விக்கெட்டுகளை வீழ்த்திய சகிப், வங்கதேச வெற்றியை உறுதி செய்தார். இறுதியில், 47 ஓவரில் 200 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழக்க, 62 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் வெற்றிப் பெற்றது.
இந்த வெற்றியின் மூலம், 7 போட்டிகளில் தங்களது மூன்றாவது வெற்றியை வங்கதேசம் பதிவு செய்து, 7 புள்ளிகளுடன், 5வது இடத்தைப் பிடித்திருக்கிறது.
இந்தப் போட்டியில் 50 ரன்கள் மற்றும் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம், உலகக் கோப்பை தொடரில், இச்சாதனையை படைத்த இரண்டாவது வீரர் எனும் பெருமையை சகிப் அல் ஹசன் பெற்றார். 2011 உலகக் கோப்பையில் யுவராஜ் சிங் முதன் முதலாக இந்த '50 + 5' எனும் சாதனையைப் படைத்த முதல் வீரர் ஆவர்.
அதுமட்டுமின்றி, ஒரு உலகக் கோப்பைத் தொடரில் 400+ ரன்கள் மற்றும், 10+ விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் எனும் பெருமையையும் சகிப் அல் ஹசன் பெற்றுள்ளார். மேலும், உலகக் கோப்பை போட்டி ஒன்றில், ஐந்து விக்கெட் வீழ்த்திய முதல் வங்கதேச பவுலர் எனும் பெருமையையும் சகிப் பெறுகிறார்.
அதுமட்டுமின்றி, வங்கதேசத்திற்காக உலகக் கோப்பைத் தொடரில் 1000 ரன்களை கடந்த முதல் வீரர் எனும் பெருமையையும் சகிப் பெறுகிறார்.
உலகக் கோப்பையில் தங்கள் நாட்டிற்காக மொத்தமாக 1000 ரன்களைக் கடந்த முதல் வீரர்கள்:
இந்தியா - சச்சின் டெண்டுல்கர்
பாகிஸ்தான் - ஜாவேத் மியான்தத்
வெஸ்ட் இண்டீஸ் - விவியன் ரிச்சர்ட்ஸ்
ஆஸ்திரேலியா - மார்க் வாக்
இலங்கை - அரவிந்த டி சில்வா
தென்னாப்பிரிக்கா - கிப்ஸ்
நியூசிலாந்து - ஸ்டீபன் பிளமிங்
வங்கதேசம் - சகிப் அல் ஹசன்
இப்போது முதல் பத்தியில் சொன்ன 'அந்த அணி' எதுவென்று சொல்கிறோம். இங்கிலாந்து.
இங்கிலாந்துக்கு இன்னும் மூன்று போட்டிகள் மீதமுள்ளது. தற்போது அதன் புள்ளிகள் 8. ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து ஆகிய அணிகளிடம் இங்கிலாந்து மோதவுள்ளது. இந்த மூன்று அணிகளும், இந்த உலகக் கோப்பையில் எவ்வளவு வலிமையான அணிகளாக வலம் வருகின்றன என்று சொல்லத் தேவையில்லை.
அதுவே, வங்கதேசம் இன்னும் இரண்டு போட்டிகளில் ஆட வேண்டும். அது எதிர் கொள்ளவிருக்கும் அணிகள் இந்தியா, பாகிஸ்தான்(இரண்டும் ஆசிய அணிகள்). வங்கதேசத்தின் தற்போதைய புள்ளிகள் 7. இதில், ஒரு போட்டியில் வங்கதேசம் வெற்றிப் பெற்றாலும், அதன் புள்ளி எண்ணிக்கை 9. இரண்டிலும் வென்றால் 11.
ஆனால், இங்கிலாந்து தனது மூன்று போட்டிகளில், இரண்டில் தோற்கிறது என்றால், அதன் மொத்த புள்ளிகள் 10 தான். அப்போது, நான்காவது அணியாக வங்கதேசம் அரையிறுதிக்கு முன்னேறிவிடும். இவையனைத்தும் யூகமே. கிரிக்கெட்டே, ஒரு யூகமான விளையாட்டுத் தானே!. இனி என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.