வங்கதேச வீரர்களுக்கு அபராதம்! அவர்கள் மட்டும் தவறு செய்தார்களா?

நன்னடத்தையை மீறிவிட்டதாக கூறி வங்கதேச வீரர்களுக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது

முத்தரப்பு டி20 தொடரில், நேற்று நடந்த முக்கியமான ஆட்டத்தில், நன்னடத்தையை மீறிவிட்டதாக கூறி வங்கதேச வீரர்களுக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.

கடைசி ஓவரில் வங்கதேச அணியின் வெற்றிக்கு 12 ரன்கள் தேவை என்ற நிலையில், இலங்கை வீரர் உதானா முதல் இரண்டு பந்துகளையும் பவுன்சராக வீசினார். ஆனால் நடுவர் நோ-பால் கொடுக்க மறுத்து விட்டார். குறிப்பாக, இரண்டாவது பந்து நோ-பால் என்பது உறுதியானதால், அந்த தகவலை களத்தில் இருந்த வீரர்களுக்கு தெரிவிக்க ரிசர்வ் வீரர் நூருல் ஹசன் மைதானத்திற்குள் சென்றார். அப்போது நூருல் ஹசனுக்கும், இலங்கை கேப்டன் திசாரா பெரேராவிற்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அதுமட்டுமின்றி, பேட்ஸ்மேன்ககளை விளையாட வேண்டாம் என செய்கை காட்டினர் கேப்டன் ஷகிப் அல் ஹசன். மேலும், இலங்கை வீரர் குசல் மெண்டிஸும் வங்கதேச வீரர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இந்த நிலையில், ஐசிசியின் வீரர்கள் நன்னடத்தையை ஷகிப் அல் ஹசனும், நூருல் ஹசனும் மீறிவிட்டதாக கூறி, இருவருக்கும் தலா 25 சதவீதம் அபாரம் விதிக்கப்பட்டதுடன், ஒரு டிமெரிட் புள்ளியும் ஐசிசி வழங்கியுள்ளது. இன்று காலை நடைபெற்ற விசாரணையில் இருவரும் தங்களது குற்றத்தை ஒப்புக் கொண்டு, தண்டனையை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தனர். இதனடிப்படையில் அபராதம் வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம், மோதல் போக்கில் ஈடுபட்ட பெரேராவிற்கும், குசல் மெண்டிஸுக்கும் எந்த தண்டனையும் வழங்கப்படவில்லை.

×Close
×Close