சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக 140 ரன்னில் சுருண்டு மோசமான தோல்வியை சந்தித்ததால் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் வார்னே.
காவிரி விவகாரம் தொடர்பாக சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்த எதிர்ப்பு கிளம்பியதால், போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்டது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம், சிறப்பு ரயில் மூலம் ரசிகர்கள் புனேவுக்கு சென்று போட்டியை நேரில் காண ஏற்பாடு செய்திருந்தது. அதன்படி, 1000 சிஎஸ்கே ரசிகர்கள், நேற்று நடந்த ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியை நேரில் காண ரயில் மூலம் புனே சென்றனர்.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்து 204 ரன்களை சென்னை அணி குவித்தது. வாட்சன் சதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய ராஜஸ்தான் அணி 140 ரன்களுக்கு சுருண்டது. க்ளாசீன், ரஹானே, பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் என மேட்ச் வின்னர்கள் இருந்தும் அந்த அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் சுருண்டு இருப்பது, ராஜஸ்தான் ரசிகர்களை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியது.
இந்த நிலையில், மோசமான தோல்விக்காக அந்த அணியின் தலைமை பயிற்சியாளரும், ஆலோசகருமான ஷேன் வார்னே ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து ஷேன் வார்னே தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் மூன்று வகையிலும் (பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங்) மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். வீரர்கள் நம்பிக்கையை இழக்கவில்லை. முயற்சி செய்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள்.
நாங்கள் சரியான நிலைக்கு திரும்புவோம். அடுத்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால், முதல் பாதி சீசனில் 4 வெற்றி, 3 தோல்வி என்ற நிலை ஏற்படும், இரண்டு வெற்றி, ஐந்து தோல்வி என்றால் அது சரியானது அல்ல’’ என்று பதிவிட்டுள்ளார்.