worldcup 2023 | shane-warne | India Vs Australia: 13வது உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி நேற்று அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில், இந்தியா - ஆஸ்திரேலியா மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் எடுத்தது.
241 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா 43 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்தது. இதனால், இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா 6வது முறையாக உலகக்கோப்பையை வென்றது. அதிரடியாக ஆடிய டிராவிஸ் ஹெட் 120 பந்துகளில் 15 பவுண்டரிகள் 4 சிக்ஸர்களுடன் 137 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றார்.
முன்பே கணித்த ஷேன் வார்னே
/indian-express-tamil/media/post_attachments/0449d83b-d33.jpg)
இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் இறுதிப் போட்டி வெற்றியில் முக்கிய பங்காற்றிய டிராவிஸ் ஹெட் எதிர்காலத்தில் சூப்பர் ஸ்டார் வீரராக இருப்பார் என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வார்னே கணித்துள்ளார். இது தொடர்பாக அவர் 2016ம் ஆண்டில் பதிவிட்ட அவரது எக்ஸ் சமூக வலைதள பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
"நான் ஒரு கிரிக்கெட் வீரராக டிராவிஸ் ஹெட்டின் பெரிய ரசிகன், அவர் அனைத்து வகையான ஆட்டங்களிலும் ஆஸ்திரேலியாவின் எதிர்கால நட்சத்திரமாக இருப்பார் என்று நான் நம்புகிறேன்." என்று பதிவில் ஷேன் வார்னே பதிவிட்டு இருந்தார்.
ஆடவர் ஐசிசி போட்டியின் இறுதிப் போட்டியில் இரு சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை டிராவிஸ் ஹெட் பெற்றார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 163 ரன்கள் எடுத்திருந்தார்.
/indian-express-tamil/media/post_attachments/78f7945f-b08.jpg)
இதேபோல், ஹெட் உலகக் கோப்பையின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதுகளை வென்ற நான்காவது வீரர் ஆனார். முன்னதாக 1983ல் மொஹிந்தர் அமர்நாத், 1996ல் அரவிந்த டி சில்வா மற்றும் 1999ல் ஷேன் வார்னே ஆட்ட நாயகன் விருதுகளை வென்று இருந்தனர்.
கடந்த 2016 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா அணிக்காக அறிமுகமான டிராவிஸ் ஹெட் அண்மை காலங்களில் முக்கியமான வீரராக மாறியுள்ளார். 7 ஆண்டுகளுக்கு மேலாக ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடினாலும், ஹெட் இதுவரை வெறும் 64 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார் என்பது குறிப்பித்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“