ஆசைத் தம்பி
பிரான்ஸ் தலைநகரான பாரீஸில், கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஃபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் காலிறுதிப் போட்டிகள் நேற்று நடைபெற்றன.
இதில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று ஆட்டம் ஒன்றில் முதல் நிலை வீராங்கனையான சிமோனா ஹாலெப், 12-ம் நிலை வீராங்கனையான ஏஞ்சலிக் கெர்பரை எதிர்கொண்டார். இப்போட்டியின் முதல் செட்டை கெர்பர் 7-6 என்று போராடி கைப்பற்றினார். தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டை ஹாலெப், 6-3 என கைப்பற்றி போட்டியை சமனாக்கினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஹாலெப் மூன்றாவது செட்டையும் 6-2 என கைப்பற்றினார். இதன்மூலம், 6-7 (7-2), 6-3, 6-2 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்ற ஹாலெப் அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றார்.
மற்றொரு காலிறுதி சுற்று ஆட்டத்தில், 3-ம் நிலை வீராங்கனையான கேப்ரின் முகுருசா, ரஷ்யாவின் மரியா ஷரபோவாவை எதிர்கொண்டார். இப்போட்டியில், அதிரடியாக விளையாடிய முகுருசா 6-2, 6-1 என்ற நேர் செட்களில் எளிதாக வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார். ஷரபோவாவின் தோல்வி அவருடைய ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இதைத் தொடர்ந்து, இன்று நடைபெறும் அரையிறுதிப் போட்டியில், ஹாலெப் - முகுருசா, கீஸ் - ஸ்டீபென்ஸ் ஆகியோர் பலப்பரீட்சை செய்கின்றனர்.
அதேசமயம், நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் மற்றும் 11-ம் நிலை வீரரான அர்ஜெண்டினாவின் டிகோ ஷ்வர்ட்ஸ்மான் (Diego Schwartzman) மோதினர்.
இதில், முதல் செட்டை அர்ஜெண்டினா வீரர் கைப்பற்றினார். இதையடுத்து, ஆக்ரோஷமாக ஆடிய நடால் 5-3 என்ற கணக்கில் முன்னிலை பெற்றபோது மழை பெய்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.இதேபோல், மற்றொரு ஆட்டத்தில் குரோசியா வீரர் மரின் சிலிச் மற்றும் அர்ஜெண்டினாவின் ஜுவான் மார்டின் டெல் போட்ரோவும் மோதினர். இந்தப் போட்டியும் மழையால் பாதிக்கப்பட்டது. இவ்விரு ஆட்டங்களும் இன்று மீண்டும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.