ஒருநாள் தொடரில் இருந்து விலகிய பும்ரா! ஷர்துள் தாகுருக்கு மீண்டும் வாய்ப்பு!

ஒருநாள் தொடரில் இருந்து பும்ரா நீக்கம்

இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டி20, மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. ஜூலை 3ம் தேதி நடைபெற்ற முதல் டி20 போட்டியில், இந்திய அணி எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இன்று (ஜூலை 6) இரு அணிகளுக்கும் இரண்டாவது டி20 போட்டி நடைபெறுகிறது.

இந்நிலையில், டி20 போட்டியைத் தொடர்ந்து, ஒருநாள் தொடரில் இருந்தும் காயம் காரணமாக அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா நீக்கப்பட்டுள்ளார்.

கடந்த 27ம் தேதி அயர்லாந்து அணிக்கு எதிராக நடந்த டி20 போட்டியில், 20வது ஓவரை வீசிய பும்ரா, பேட்ஸ்மேன் அடித்த பந்தை கேட்ச் செய்ய முயன்ற போது, அவரது விரலில் காயம் ஏற்பட்டது. இதனால் டி20 போட்டிகளில் இருந்து பும்ரா நீக்கப்பட்டார். இந்நிலையில், இப்போது ஒருநாள் தொடரில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஷர்துள் தாகுர் அணியில் சேர்க்கப்படுவதாக பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. தென்னாப்பிரிக்க தொடரில் இந்திய அணியில் இடம் பிடித்திருந்த தாகுருக்கு மீண்டும் தற்போது வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான பும்ரா காயத்தால் வெளியேறி இருப்பது, இந்திய அணியிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. தவிர, அவருக்கு கடந்த 4ம் தேதி நடந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது. இந்திய அணியின் மருத்துவ கண்காணிப்பில் உள்ள பும்ரா விரைவில் இந்தியா திரும்புகிறார்.

×Close
×Close