Congress MP Shashi Tharoor - Sanju Samson Tamil News: நியூசிலாந்து மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி செய்து வரும் சுற்றுப்பயணம் இன்றுடன் முடிவடைகிறது. அங்கு டி-20 தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 25 ஆம் தேதி) ஆக்லாந்தில் நடந்த முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி இந்தியாவை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதைத்தொடர்ந்து, கடந்த ஞாயிற்று கிழமை (நவம்பர் 27 ஆம் தேதி) ஹாமில்டனில் நடந்த 2வது ஒருநாள் ஆட்டம் தொடர் மழை காரணமாக கைவிடப்பட்டது. 12.5 ஓவர்கள் மட்டுமே பந்துவீசப்பட்ட நிலையில் மழையால் பாதியில் ரத்தானது.
இந்த நிலையில், இந்தியா-நியூசிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லே ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டிக்கான டாஸ் போடப்பட்ட நிலையில், அதை வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
ஆடும் லெவனில் சஞ்சு இல்லை - பயிற்சியாளர் லட்சுமணனை கடுமையாக சாடிய சசி தரூர்
இந்நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கொடுக்காதது குறித்து திருவனந்தபுரம் பாராளுமன்ற உறுப்பினர் சசி தரூர் பயிற்சியாளர் லட்சுமணனை கடுமையாக சாடியுள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் சஞ்சு சாம்சனுக்கு முதல் ஒருநாள் போட்டியில் மட்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. 2வது போட்டியில் அவருக்கு பதிலாக தீபக் ஹூடா அணியில் இடம் பிடித்தார். அணியில் இடம் பிடித்துள்ள விக்கெட் கீப்பர் வீரர் ரிஷப் பண்ட சரியாக விளையாடாமலும் ரன்களை குவிக்காமலும் இருந்து வருகிறார். அதனால், அவருக்கு ஓய்வு அளித்து விட்டு சாம்சனை அணியில் ஆட வைக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று நடைபெற்று வரும் 3வது போட்டியிலும் சஞ்சு சாம்சனுக்கு அணியில் இடம் இல்லை. இது குறித்து காங்கிரஸ் எம்.பி சசி தரூர் பொறுப்பு பயிற்சியாளர் லட்சுமணனை கடுமையாக சாடி கருத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சசி தரூர் தனது டிவிட்டர் பக்கத்தில், "பண்ட் 4வது வரிசையில் சிறப்பாக செயல்பட்டார். எனவே அவரை ஆதரிப்பது அவசியம் என வி.வி.எஸ். லட்சுமணன் கூறுகிறார். பண்ட் ஒரு திறமையான வீரர், ஃபார்ம் இல்லாத ஒரு நல்ல வீரர், அவர் தனது கடைசி 11 இன்னிங்ஸ்களில் 10ல் சரியாக ஆட வில்லை. சாம்சனின் ஒருநாள் போட்டிகளில் சராசரி 66. அவர் தனது கடைசி 5 போட்டிகளிலும் ரன்களை அடித்துள்ளார். ஆனாலும் அவருக்கு அணியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. எண்ணிக்கையை பாருங்கள் (ரன்கள், சராசரி, ஸ்டிரைக்ரேட்)." என்று பதிவிட்டுள்ளார்.
"Pant has done well at No. 4, so it is important to back him," says @VVSLaxman281. He's a good player out of form who's failed in ten of his last 11 innings; Samson averages 66 in ODIs, has made runs in all his last five matches & is on the bench. Go figure. @IamSanjuSamson
— Shashi Tharoor (@ShashiTharoor) November 30, 2022
இந்த ஆட்டத்தில் ரிஷப் பண்ட் 10 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறிய நிலையில், அதன் பின் சசி தரூர் தனது டிவிட்டர் பக்கத்தில், பண்ட்டுக்கு இன்னும் ஒரு தோல்வி. வெள்ளை-பந்து கிரிக்கெட்டில் இருந்து அவருக்கு ஒரு இடைவெளி தேவை. சாஞ்சுவுக்கு மேலும் ஒரு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இந்திய டாப் ஆர்டரில் பேட் செய்ய சிறந்தவர் என்பதை அவர் ஐபிஎல் தொடர் முடியும் வரை இப்போது காத்திருக்க வேண்டும்." என்று பதிவிட்டுள்ளார்.
One more failure for Pant, who clearly needs a break from white-ball cricket. One more opportunity denied to @IamSanjuSamson who now has to wait for the @IPL to show that he’s one of the best too-order bats in India. #IndvsNZ https://t.co/RpJKkDdp5n
— Shashi Tharoor (@ShashiTharoor) November 30, 2022
சஞ்சு சாம்சனின் ஒருநாள் போட்டி ரெகார்ட்: 11 போட்டிகள், 10 இன்னிங்ஸ், 330 ரன்கள், 66 சராசரி
ஒருநாள் போட்டி இன்னிங்சுகளில் சஞ்சு சாம்சன்: 46, 12, 54, 6, 43, 15, 86, 30, 2*, 36
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.