/indian-express-tamil/media/media_files/2025/04/22/fo4cp387UcyMfu63r3qa.jpg)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் சிவம் துபே, இன்று (ஏப்ரல் 22) நடைபெற்ற தமிழ்நாடு விளையாட்டு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் விருது வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். குறிப்பாக, வளர்ந்து வரும் 10 விளையாட்டு வீரர்களுக்கு தலா ரூ. 70 ஆயிரத்தையும் அவர் வழங்கினார்.
இந்த விழாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் விளையாட்டு வீரர்களுக்கு, அவர்களது சாதனைக்கு அங்கீகாரம் வழங்கும் விதமாக தமிழ்நாடு விளையாட்டு பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் ரூ. 30 ஆயிரம் உதவித்தொகையாக வழங்கப்பட்டது.
அபிநந்த் (டேபிள் டென்னிஸ்), கே.எஸ்.வெனிசா ஸ்ரீ (வில்வித்தை), முத்துமீனா வெள்ளசாமி (பாரா தடகளம்), ஷமீனா ரியாஸ் (ஸ்குவாஷ்), எஸ்.நந்தனா (கிரிக்கெட்), கமலி பி (சர்ஃபிங்), ஆர்.அபிநயா (தடகளம்), ஆர்.சி.ஜித்தின் அர்ஜுனன் (தடகளம்) ஆகியோருக்கு விருதுகள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டன.
விளையாட்டு வீரர்கள் மற்றும் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில், மும்பையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான சிவம் துபே, தமிழ்நாட்டு வீரர்களுக்கு நிதியுதவி அளித்துள்ளார்.
மேலும், இந்த விழாவில் அவர் உரையாற்றினார். அப்போது, "இந்த நிகழ்வு, அனைத்து இளம் விளையாட்டு வீரர்களுக்கும் உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது. இந்த சாதனைகள் அனைத்தும் தேசத்திற்கு பெருமை சேர்ப்பதற்காக அவர்களுக்கு கூடுதல் உத்வேகத்தை அளிக்கிறது. இந்நிகழ்விற்கு என்னை அழைத்ததற்கு நன்றி. மும்பையில் இதுபோன்ற சில நிகழ்ச்சிகளை நான் பார்த்திருக்கிறேன். மற்ற மாநிலங்கள் குறித்து எனக்கு தெரியாது. இந்த ரூ. 30 ஆயிரம் சிறிய தொகையாக தோன்றலாம். ஆனால், இது உத்வேகம் அளிக்கும். இளம் வயதில் உங்களுக்கு கிடைக்கும் ஊக்கத்தொகையும், விருதும் உண்மையிலேயே முக்கியமானது" என்று கூறினார்.
மேலும், இந்த விழாவின் மற்றொரு சிறப்பு விருந்தினராக சி.எஸ்.கே அணியின் நிர்வாக இயக்குநர் விஸ்வநாதன் பங்கேற்றார். அப்போது, "மற்ற விளையாட்டுகளுக்கும் தேவையான உதவிகளை சி.எஸ்.கே நிர்வாகம் செய்யும் என்று நான் தெளிவுபடுத்திக் கொள்கிறேன்" என அவர் கூறினார்.
தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்தின் உதவி செயலாளரான மருத்துவர் ஆர்.என். பாபா, தமிழ்நாடு விளையாட்டு பத்திரிகையாளர்கள் சங்கம், தனது மனதுக்கு நெருக்கமானது என்று கூறினார். "இதே விருதுகள் என் வீட்டில் இரண்டு உள்ளன. எனது மகன் அபராஜித் மற்றும் மருமகள் ஜெயவீணா கடந்த காலத்தில் இதனை வென்றுள்ளனர். வீரர்களின் திறமைக்கு அங்கீகாரம் அளிக்கும் அற்புதமான பணியை இந்த சங்கம் செய்து வருகிறது" என அவர் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.