Indian-cricket-team | rahul-dravid | pakistan | Shoaib Malik: சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்திய கிரிக்கெட் அணிக்காக 1996 ஆம் ஆண்டு அறிமுகமானவர் தான் ராகுல் டிராவிட். இந்திய கிரிக்கெட் கண்டு எடுத்த முத்துக்களில் ஒருவராக திகழ்ந்து வரும் டிராவிட் டெஸ்ட் கிரிக்கெட்டில் அழியா முத்திரையை பதிவு செய்துள்ளார். அவருக்கு ‘தி வால்,’ ‘ஜம்மி,’ மற்றும் ‘மிஸ்டர் நம்பக்கூடியவர்' போன்ற செல்லப் பெயர்களும் உண்டு.
இந்திய அணிக்காக 164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர் 13,288 ரன்களை குவித்துள்ளார். 344 ஒருநாள் போட்டிகளில் 10,889 ரன்களை எடுத்துள்ளார். ஒரு டி-20 போட்டி மற்றும் 89 ஐ.பி.எல் போட்டிகளில் 31 ரன் மற்றும் 2174 ரன்களை எடுத்துள்ளார்.
கடந்த 2013ம் ஆண்டில் தனது ஓய்வை அறிவித்த ராகுல் ட்ராவிட், அதன்பின்னர் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக பணியாற்றினார். மேலும், 19 வயதுக்குட்பட்ட இந்திய அணி, இந்தியா 'ஏ' அணி வீரர்களுக்கு பயிற்சி அளித்தார். தற்போது மூத்த இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்து வருகிறார்.
/indian-express-tamil/media/post_attachments/70025e53-4d3.jpg)
இந்தியா - இலங்கை மோதல்
அவரது பயிற்சியில் ரோகித் சர்மா தலைமையில் களமாடிய வரும் இந்திய அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளிலும் வெற்றியை ருசித்து வீறுநடை போட்டு வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை 100 ரன்கள் வித்தியாசத்தில் சாய்த்த இந்திய அணி லீக் சுற்றில் அடுத்ததாக இலங்கை அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகள் மோதும் போட்டியானது வருகிற வியாழக்கிழமை (நவம்பர் 2ம் தேதி) மும்பையில் நடைபெற உள்ளது.
புகழாரம்
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் குறித்து பேசியுள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக் அவருக்கு பாராட்டு தெரிவித்து புகழாரம் சூட்டியுள்ளார். டிராவிட்டின் தன்னலமற்ற அணுகுமுறை தான் இந்திய பயிற்சியாளராக அவரது பங்கை சிறப்பாகச் செய்ய உதவுகிறது என்றும், குறிப்பாக அவர் 19 வயதுக்குட்பட்ட இந்திய அணி பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட காலத்திலிருந்து அவரது பாணியில் பணியாற்றினார் என்றும் சோயப் மாலிக் தெரிவித்துள்ளார்.
/indian-express-tamil/media/post_attachments/a291d494-83b.jpg)
பாகிஸ்தான் செய்தி சேனலான 'ஏ ஸ்போர்ட்ஸ்'-ல் சோயப் மாலிக் பேசுகையில் அவருடன் நிகழ்ச்சியில் மற்ற விருந்தினர்களாக முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம், மொயின் கான் மற்றும் மிஸ்பா -உல்ஹக் போன்றோர் இருந்தனர். அப்போது ட்ராவிட் பற்றிய கதையைக் கூறினார்.
"நாங்கள் பாகிஸ்தானில் இருந்து நியூசிலாந்துக்கு பயணம் செய்து கொண்டிருந்தோம். அதே நேரத்தில், அதே விமானத்தில் 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியும் எங்களுடன் பயணித்தது. அப்போது அந்த அணியின் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருந்தார்.
அவர் என்னிடம் பேச விரும்பினார். ஆனால், நான் அப்போது தூங்கிக் கொண்டிருந்தேன். அதனால், அவர் நான் எழுந்திருப்பதற்காக இரண்டு மணி நேரம் காத்திருந்தார். பின்னர் என்னிடம் 'நீங்கள் பல கம்பேக்குகளைச் செய்துள்ளீர்கள், உங்களைத் தூண்டுவது எது?' என்று அவர் என்னிடம் கேட்க விரும்பினார். மேலும் அவர் 'நான் 19 வயதுக்குட்பட்ட அணிக்கு பயிற்சியளித்து வருகிறேன். எனவே, அதன் பின்னணி என்ன என்பதை அவர்களிடம் சொல்ல விரும்புகிறேன்' என்றும் கூறினார்.
எனவே, இதன் மூலம் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், அவருக்கு ஈகோ இல்லை. நீங்கள் கம்பேக் கொடுக்க முயற்சிக்கும் போது அவர் என்ன செய்கிறீர்கள் என்பதைக் கற்றுக்கொள்ள விரும்புகிறார். தனது சொந்த வாழ்க்கையில் அவர் நிறைய ஏற்ற தாழ்வுகளைக் கண்டவர். எனவே அவர் என்னிடம் கேட்டார். நானும் அவரிடம் சொன்னோம். எனக்கு அது மிகவும் பிடித்திருந்தது. கற்றல் செயல்முறை ஒருபோதும் முடிவடையாது. இப்போது இந்திய அணி (ராகுல் டிராவிட்டின் கீழ்) இருக்கும் இடத்தைப் பாருங்கள்." என்று சோயப் மாலிக் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“