துலீப் டிராபி 2024 போட்டிகள் அனந்தபூரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியா ஏ,பி,சி,டி அணிகள் களமாடி வருகின்றன. இந்நிலையில், அனந்தபூரில் நடந்து வரும் 3-வது போட்டியில் மயங்க் அகர்வால் தலைமையிலான இந்தியா ஏ மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்தியா டி அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா ஏ அணி முதல் இன்னிங்சில் 290 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகியது. இதனையடுத்து, முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த இந்தியா டி அணி 183 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆகியது. தற்போது 2வது இன்னிங்சில் ஆடி வரும் இந்தியா ஏ அணி 2 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்து இந்தியா டி அணியை விட 222 ரன்கள் முன்னிலை வகித்து வருகிறது.
இந்த நிலையில், இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் முதல் விக்கெட்டுக்கு இந்தியா டி அணி தரப்பில் பேட்டிங் ஆட வந்தார் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர். அப்படி வரும் போது அவர் சன் கிளாஸ் அணிந்து வந்தார். களத்தில் அவர் மட்டையைச் சுழற்றி வந்த நிலையில், முதல் 6 பந்துகளுக்கு ஒரு ரன் கூட எடுக்கும் ஏமாற்றம் அளித்தார். கலீல் அகமதுவின் 2.4-வது ஓவரில் பந்தை எதிர்கொண்ட ஷ்ரேயாஸ் ஆகிப் கான் வசம் கேட்ச் கொடுத்து டக்-அவுட் ஆகி வெளியேறினார்.
இந்த நிலையில், சன் கிளாஸ் உடன் பேட்டிங் ஆட வந்த ஷ்ரேயாஸ் ரன் எதுவும் எடுக்காமல் டக் - அவுட் ஆகி பெவிலியனுக்கு நடையைக் கட்டியது ரசிகர்கள் மத்தியில் சிரிப்பலையை உருவாக்கியுள்ளது. அவரது சன் கிளாஸ் அணிந்த ஷ்ரேயாஸ் புகைப்படம் சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட நிலையில், அவரை இணைய வாசிகள் கலாய்த்து தள்ளி வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பான மீம்ஸ்களும் சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“