worldcup 2023 | india-vs-srilanka | shreyas-iyer: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று (வியாழக்கிழமை) மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த 33வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா - இலங்கை அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக அரங்கேறி இந்த ஆட்டத்தில் இலங்கை அணி டாஸ் வென்று பவுலிங் செய்வதாக அறிவித்தது.
இதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் சுப்மன் கில் (92 ரன்), விராட் கோலி (88 ரன்), ஷ்ரேயாஸ் ஐயர் (82 ரன்) ஆகியோர் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியில், 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு இந்தியா 357 ரன்கள் குவித்தது. இலங்கை அணி தரப்பில் தில்ஷான் மதுஷங்கா 5 விக்கெட்டுகளும் துஷ்மந்தா சமீரா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 358 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய இலங்கையை பந்துவீச்சு மூலம் மிரட்டியது இந்தியா. அதற்கு தாக்குப்பிடிக்க முடியாத இலங்கை அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 55 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்தியா 302 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் தொடர்ச்சியாக 7வது வெற்றியை பதிவு செய்த இந்தியா முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்திய அணி தரப்பில் தரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது ஷமி 5 விக்கெட்டுகளையும், சிராஜ் 3 விக்கெட்டுகளையும், பும்ரா மற்றும் ஜடேஜா தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
வெளுத்து வாங்கிய ஷ்ரேயாஸ்
ஷார்ட் பந்துக்கு எதிராக இந்திய வீரரான ஷ்ரேயாஸ் ஐயர் மிகவும் சிரமப்படுகிறார் என்கிற பேச்சு இருந்து வரும் நிலையில், நடப்பு உலகக் கோப்பையில் அதற்கென சிறப்பு கவனம் எடுத்து செயல்பட்டு வந்தார். நேற்றைய போட்டியில் 30 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா இருந்த போது களம் புகுந்த ஷ்ரேயாஸ் தனது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.
/indian-express-tamil/media/post_attachments/c6604294-eff.jpg)
56 பந்துகளை எதிர்கொண்ட அவர் 3 பவுண்டரிகள் 6 சிக்ஸர்களை பறக்கவிட்டு 82 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். எனினும், இந்தியாவுக்காக சிறப்பான இன்னிங்ஸை விளையாடி இருந்தார் ஷ்ரேயாஸ். அவருக்கு வீசப்பட்ட பந்துகளை மிகச் சாதரணமாக சிக்ஸர், பவுண்டரிகளுக்கு விரட்டி அடித்தார். வேகம் மற்றும் சுழல் பந்துகளுக்கு சமமாக சமாளித்து அதிரடி காட்டினார். அத்துடன் இதுவரை விளாசப்பட்ட சிக்ஸர்களில் அவர் நேற்று பறக்கவிட்டது தான் (106-மீட்டர்) அதிகபட்ச தூரத்தை கடந்தது.
இலங்கை வீரர்கள் தொடர்ந்து அவருக்கு ஷார்ட் பந்துகளை போட்டி விக்கெட் வீழ்த்த திட்டம் போட்டாலும் அதனையும் முறியடித்தார். ஆஸ்திரேலியா (0) மற்றும் இங்கிலாந்து (4 ரன்) அணிகளை தவிர, பாகிஸ்தானுக்கு எதிராக ஆட்டமிழக்கமால் 53 ரன்களையும், நியூசிலாந்துக்கு எதிராக 33 ரன்களையும் எடுத்து அசத்தினார். தற்போது இலங்கைக்கு எதிராக 82 ரன்களை எடுத்து, பேட்டிங் வரிசையில் நம்பர் 4 இடத்தை தனதாக்கிக் கொண்டுள்ளார். அவரது அசத்தலான பேட்டிங் எதிராணிகளின் புருவங்களை உயரச் செய்துள்ளது என்றால் மிகையாகாது.
அதிரடி பதில்
இந்தப் போட்டிக்குப் பிறகான பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஷ்ரேயாஸ் ஐயர் கலந்துகொண்டார். அப்போது அவரிடம், ரபாடா, ஜான்சன் போன்ற தரமான ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசக்கூடிய பவுலர்களை கொண்ட தென் ஆப்பிரிக்காவை சமாளிக்க என்ன திட்டத்தை வைத்திருக்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு அதிரடியான பதிலைக் கொடுத்த ஷ்ரேயாஸ், "ஷார்ட் பிட்ச் பந்துகள் என்னை திணறடிக்கிறதா? நீங்கள் நான் எவ்வளவு புல் ஷாட்களை அடித்துள்ளேன் என்பதை பார்த்திருக்கிறீர்களா. குறிப்பாக அதில் எத்தனை பந்துகள் பவுண்டரிக்கு சென்றன என்பதை பார்த்தீர்களா? பொதுவாக ஷார்ட் பிட்ச் அல்லது ஓவர் பிட்ச் பந்துகளாக இருந்தாலும் நீங்கள் சரியாக அடிக்கவில்லை என்றால் அவுட்டாவீர்கள்.
ஆனால் அதில் நான் 2, 3 முறை அவுட்டானால் உடனடியாக இவருக்கு இன்ஸ்விங் பந்துகளை அடிக்க தெரியாது, பந்து வேகமாக வந்தால் கட் ஷாட் அடிக்கத் திணறுவார் என்று நீங்கள்தான் சொல்கிறீர்கள். பொதுவாகவே அனைத்து வீரர்களும் எந்த வகையான பந்திலும் அவுட்டாவார்கள். ஆனால் நீங்கள்தான் அவரால் ஷார்ட் பிட்ச் பந்துகளை அடிக்க முடியாது என்ற சூழ்நிலையை உருவாக்கி விடுகிறீர்கள்" என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“