IPL 2024 | Shreyas Iyer: 17வது ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடர் வருகிற 22 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த தொடருக்கான முதற்கட்ட அட்டவணை வெளியாகிய நிலையில், சென்னையில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் எம்.எஸ் தோனி தலைமையிலான சி.எஸ்.கே அணி ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமையிலான ஆர்.பி.சி அணியுடன் மல்லுக்கட்டுகிறது.
ஐ.பி.எல். 2024 தொடக்க போட்டிகளை தவறவிடும் ஸ்ரேயாஸ்?
இந்நிலையில், ஐ.பி.எல் தொடருக்கான 10 அணிகளும் தங்களது வீரர்களுடன் பயிற்சி அமர்வுகளை நடத்தி தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்த நிலையில், ஐ.பி.எல் தொடருக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், நடப்பு சீசனின் தொடக்க ஆட்டங்களிளை தவறவிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது நடந்து வரும் மும்பை - விதர்பா அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பை தொடரின் இறுதிப்போட்டியின்போது அவருக்கு மீண்டும் முதுகு வலி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், அவரது காயத்தன்மை குறித்து எந்த வித தகவலும் வெளிவரவில்லை. அவருக்கு இருக்கும் முதுகு வலி பிரச்சினை காரணமாக ஐ.பி.எல். தொடரின் தொடக்க போட்டிகளை தவறவிடுவார் எனக் கூறப்படுகிறது.
ஸ்ரேயாஸ் ஐயர், கடந்த வருடம் முதுகு வலி பிரச்சனை காரணமாக ஐ.பி.எல். தொடரை தவறவிட்ட நிலையில், அதற்காக சிகிச்சை மேற்கொள்ள லண்டன் சென்றார். அதன்பின் காயத்திலிருந்த மீண்ட அவர் 50 ஓவர் உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்பட்டார். இருப்பினும், உள்ளூர் தொடரான ரஞ்சி கோப்பையில் விளையாட மறுப்பதாக கூறி அவரை மத்திய ஒப்பந்தத்தில் இருந்து பி.சி.சி.ஐ. நீக்கியது.
இதனையடுத்து, ரஞ்சி கோப்பை தொடரின் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டியில் அவர் மும்பை அணியில் விளையாடினார். முதுகு வலி பிரச்சனை காரணமாக இறுதிப்போட்டியின் 4-வது நாளில் (நேற்று புதன்கிழமை) பீல்டிங் செய்ய அவர் களத்திற்கு வரவில்லை. மேலும் கடைசி நாளான இன்றும் அவர் களத்திற்கு வரவில்லை என்பது குறிபிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“