/indian-express-tamil/media/media_files/2025/08/21/shreyas-iyer-likely-to-replace-rohit-sharma-as-india-odi-captain-report-tamil-news-2025-08-21-11-22-24.jpg)
ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக ஷ்ரேயாஸ் ஐயர் இந்தியாவின் புதிய ஒருநாள் அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. அடுத்த வருடம் நடைபெற உள்ள ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பைக்கு ஆசிய அணிகள் தயாராகும் பொருட்டு இந்த தொடர் டி20 வடிவில் நடத்தப்பட உள்ளது. நடப்பு சாம்பியனான இந்தியா உள்பட 8 அணிகள் பங்கேற்கும் நிலையில், அந்த அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
‘ஏ’ பிரிவில் இந்தியா, ஓமான், பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஹாங்காங் ஆகிய அணிகள் இடம் பிடித்துள்ளன. இதில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை செப்டம்பர் 10 ஆம் தேதி துபாயில் சந்திக்கிறது. இதைத்தொடர்ந்து பரம போட்டியாளரான பாகிஸ்தானை செப்டம்பர் 14 ஆம் தேதி துபாயிலும், ஓமனை செப்டம்பர் 19 ஆம் தேதி அபுதாபியிலும் எதிர்கொள்கிறது. இறுதிப்போட்டி செப்டம்பர் 28 ஆம் தேதி துபாயில் அரங்கேறுகிறது.
இந்நிலையில், இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது. அதன்படி, சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியில் சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியில் நட்சத்திர வீரர்களாக ஜொலித்த ஜஸ்பிரித் பும்ரா மற்றும் குல்தீப் யாதவ் மீண்டும் அணியில் இடம் பெற்றுள்ளனர். ஒரு வருடத்திற்குப் பிறகு அவர்கள் அணியில் திரும்ப சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். இந்தியாவின் காத்திருப்பு வீரர்களாக பிரசித் கிருஷ்ணா, வாஷிங்டன் சுந்தர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், துருவ் ஜூரல் உள்ளிட்ட வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் இடம் பெறாதது பெரும் பேசு பொருளாக மாறியது. களத்தில் இருந்து நிலையாக பேட்டை சுழற்றி அதிரடியாக ரன்களை குவிக்கும் ஷ்ரேயாசை சேர்க்காதது குறித்து பி.சி.சி.ஐ. மீது கடும் விமர்சனங்கள் எழுந்தது. இத்தகைய சூழலில், ரோகித் சர்மாவுக்குப் பதிலாக, இந்தியாவின் புதிய ஒருநாள் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் பொறுப்பேற்க வாய்ப்புள்ளதாக பி.சி.சி.ஐ வட்டாரங்கள் கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியா தொடருக்கு முன்னதாகவே ஷ்ரேயாஸ் ஐயரின் ஒருநாள் அணியின் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்றும், இருப்பினும், அது பெரும்பாலும் ரோகித் சர்மாவின் எதிர்காலம் குறித்த முடிவைப் பொறுத்தே அமையும் என்றும் கூறப்பட்டுளள்து. இதேபோல், ஆசியக் கோப்பைக்குப் பிறகு, ரோகித்திடம் ஆலோசனை பெற்ற பிறகு, ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்படுவது குறித்த தெளிவான முடிவு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் பி.சி.சி.ஐ-க்குள் அதிகாரபூர்வமற்ற கூட்டம் ஒன்று நடைபெற்ற நிலையில், அதில் அனைத்து வடிவங்களிலும் இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்கால கேப்டன் குறித்த விவாதம் நடைபெற்றுள்ளது. அப்போது, ஒரே வீரர் மூன்று வடிவ இந்திய அணிக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டால், அது அந்த வீரருக்கு கூடுதல் சுமையைத் தரும் என விவாதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஏற்கனவே டெஸ்ட் அணி கேப்டன்சியில் முன்னணியில் இருக்கும் மற்றும் டி20 அணி கேப்டன்சிக்கு வலுவான போட்டியாளராகக் கருதப்படும் கில், மூன்று வடிவ அணிகளுக்கும் கேப்டன் என்கிற பொறுப்பு ஒப்படைக்கப்படாமல் போகலாம்.
38 வயதான ரோகித் ஏற்கனவே டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். ஒருநாள் போட்டிகளில் இருந்தும் அவர் விலகினால், ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும் ஆப்பிரிக்காவில் நடைபெறும் 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கு இந்தியாவை வழிநடத்தவும் வாய்ப்புள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.