Shreyas Iyer Tamil News: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி தற்போது 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் நேற்று வியாழக்கிழமை முதல் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்த நிலையில், இன்று காலை 2ம் நாள் ஆட்ட நேரத்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 345 ரன்கள் சேர்த்துள்ளது.
இந்திய அணியில் அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் 105 ரன்களும், ஷுப்மன் கில் 52 ரன்களும், ஜடேஜா 50 ரன்களும் சேர்த்தனர். நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக டிம் சவுத்தி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அறிமுக வீரரின் அதிரடி…
இந்த ஆட்டத்தில் இந்திய அணி சார்பில் அறிமுக வீரராக களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நேற்று புஜாராவின் விக்கெட்டுக்கு பிறகு களம் கண்ட இவர் கேப்டன் ரஹானேவுடன் ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை தொடர்ந்திருந்தார். மறுமுனையில் இருந்த ரஹானே 35 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். எனவே பின்னர் வந்த ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்தார் ஷ்ரேயாஸ்.
இந்த ஜோடி அணிக்கு வலுவான ரன்களை சேர்த்தது. இந்த தருணத்தில் தனது முதல் அரைசதத்தை கான்பூர் மண்ணில் பதிவு செய்தார் ஷ்ரேயாஸ். அவருக்கு தட்டிக்கொடுத்து ஆடிய ஜடேஜா தனது 17வது அரைசத்தை பதிவு செய்தார். நேற்றைய ஆட்டநேரம் முடிவு வரை களத்தில் இருந்த இந்த ஜோடி அணியின் அடுத்தடுத்த விக்கெட் இழப்பை தடுத்து, அணியின் ஸ்கோர் 258 என உயர்த்த உதவியது.
மீண்டும் இன்று 2ம் நாள் ஆட்டநேரத்தில் களமிறங்கிய இந்த ஜோடியில் ஜடேஜா 50 ரன்கள் சேர்ந்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். எனினும், ஷ்ரேயாஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது முதல் சதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து அதிரடி காட்ட முயலுகையில் டிம் சவுதி வீசிய 96.1 ஓவரில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
சிறப்பான ஆட்டத்துடன் அறிமுக போட்டியை தொடங்கிய ஷ்ரேயாஸ் 171 பந்துகளில் 13 பவுண்டரி 2 சிக்ஸர் என 105 ரன்கள் சேர்த்தார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் ஷ்ரேயாஸ். அவற்றை இங்கு ஒன்றன் பின் ஒன்றாக பார்க்கலாம்.
ஷ்ரேயாஸின் புதிய சாதனைகள்…
ஷ்ரேயாஸ் ஐயர் தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் அடித்ததன் மூலமாக அறிமுக டெஸ்டில் சதமடித்த 16வது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜாம்பவான்களான இந்தியாவின் லாலா அமர்நாத், குண்டப்பா விஸ்வநாத் மற்றும் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி உள்ளிட்டோர் அடங்கிய புகழ்பெற்ற பட்டியலிலும் தன்னை இணைத்துக்கொண்டார்.
கான்பூரில் தனது அறிமுக டெஸ்டில் விஸ்வநாத்துக்குப் பிறகு சதம் அடித்த 2வது இந்திய வீரர் என்ற சாதனையையும், நியூசிலாந்துக்கு எதிராக தனது அறிமுக போட்டியில் சதம் அடித்த 26 வயதுடைய மூன்றாவது இந்திய வீரர் என்ற சாதனையையும் ஷ்ரேயாஸ் படைத்தார்.
இந்த சாதனையை 1955ல் நிகழ்த்திய அர்ஜன் கிரிபால் சிங் மற்றும் 1976ல் நிகழ்த்திய சுரிந்தர் அமர்நாத் ஆகியோர் மற்ற இரு இந்திய வீரர்கள் ஆவர்.
ரோஹித் சர்மா மற்றும் பிருத்வி ஷாவுக்குப் பிறகு அறிமுக டெஸ்டில் சதம் அடித்த மூன்றாவது மும்பை வீரர் என்ற சாதனையையும் ஷ்ரேயாஸ் நிகழ்த்தினார்.
அறிமுக டெஸ்டில் சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியல்:
- லாலா அமர்நாத் v இங்கிலாந்து 1933
- தீபக் ஷோதன் v பாகிஸ்தான் 1952
- அர்ஜன் கிருபால் சிங் v நியூசிலாந்து 1955
- அப்பாஸ் அலி பெய்க் v இங்கிலாந்து 1959
- ஹனுமந்த் சிங் v இங்கிலாந்து 1964
- ஜி விஸ்வநாத் v ஆஸ்திரேலியா 1969
- சுரிந்தர் அமர்நாத் v நியூசிலாந்து 1976,
- முகமது அசாருதீன் இங்கிலாந்து 1984
- பிரவின் ஆம்ரே v தென்னாப்பிரிக்கா 1992
- சவுரவ் கங்குலி v இங்கிலாந்து 1996
- வீரேந்திர சேவாக் v தென்னாப்பிரிக்கா 2001
- சுரேஷ் ரெய்னா v இலங்கை 2010
- ஷிகர் தவான் v ஆஸ்திரேலியா 2013
- ரோஹித் சர்மா VS மேற்கிந்தியத் தீவுகள் 2013
- பிருத்வி ஷா v வெஸ்ட் இண்டீஸ் 2018
- 16.ஷ்ரேயாஸ் ஐயர் v நியூசிலாந்து 2021
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.