இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் வங்கதேசம் டாஸ் வென்று பவுலிங் செய்த நிலையில், முதல் இன்னிங்சில் ஆடிய இந்தியா 376 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அஸ்வின் 113 ரன்களும், ஜடேஜா 86 ரன்களும், ஜெய்ஸ்வால் 56 ரன்களும் எடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சில் ஆடிய வங்கதேசம் 149 ரன்னில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக ஷாகிப் அல் ஹசன் 32 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக பும்ரா 4 விக்கெட்டை வீழ்த்தினார்.
இதனையடுத்து 227 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சுப்மன் கில் 119 ரன்களும், ரிஷப் பண்ட் 109 ரன்களும் எடுத்தனர். இதனையடுத்து, 515 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய வரும் வங்கதேச அணி 3-வது நாள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் சாண்டோ 51 ரன்களுடனும், ஷகிப் அல் ஹசன் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.
சென்னை மண்ணில் சாதனை படைத்த கில்
இந்நிலையில், இந்தப் போட்டியில் தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய இளம் வீரரான சுப்மன் கில் 161 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். இதன் மூலம் கில் தனது 5-வது டெஸ்ட் சதத்தை சென்னை மண்ணில் பதிவு செய்து அசத்தினார்.
சென்னை எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் சதம் விளாசியதன் மூலம், 35 போட்டிகளில் டெஸ்ட் சதம் அடித்த இந்திய ஜாம்பவான் வீரர் ராகுல் டிராவிட்டைத் தொடர்ந்து, கில் இப்போது இரண்டாவது இந்திய நம்பர்.3 பேட்டர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார். மேலும், முதல் இன்னிங்சில் டக் அவுட்டான பிறகு, வங்கதேசத்துக்கு எதிராக இரண்டாவது இன்னிங்சில் சதம் அடித்த முதல் பேட்டர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
சென்னையில் இந்த சாதனையை எட்டிய ஒரே இந்திய நம்பர்.3 பேட்டராக ராகுல் டிராவிட்டுடன் தற்போது கில் இணைந்துள்ளதன் மூலம் எலைட் வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
தோனியின் சாதனையை சமன் செய்த பண்ட்
இந்திய இளம் வீரர் சுப்மன் கில்லுடன் அற்புதமான 167 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அமைத்து சதம் விளாசி 109 ரன்கள் எடுத்த விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷிப் பண்ட் இந்திய ஜாம்பவான் வீரர் எம்.எஸ் தோனியின் சாதனையை சமன் செய்தார். சர்வதேச டெஸ்ட் அரங்கில் தோனி 6 சதங்களை விளாசியுள்ளார் என்பது குறிப்பித்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.