shubman gill | india vs pakistan | sports | cricket: 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த தொடருக்கான சூப்பர் 4 சுற்றில் இன்று நடைபெறும் 3-வது ஆட்டத்தில் பரம போட்டியாளர்களான இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியானது இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங் செய்வதாக அறிவித்த நிலையில், இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா - சுப்மன் கில் ஜோடி களமாடினர். இந்த ஜோடி முதல் ஓவர் முதலே அடித்து ஆட ஆரம்பித்தது.
ஷஹீன் அப்ரிடி வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் கேப்டன் ரோகித் சிக்ஸரை பறக்க விட்டு மிரட்டினார். மீண்டும் அவர் வீசிய 3வது ஓவரில் கில் 3 பவுண்டரிகளை விரட்டி அடித்தார். அடுத்ததாக அப்ரிடி வீசிய 5வது ஓவரில் 3 பவுண்டரிகளை அடித்து நொறுக்கினார் கில். குறிப்பாக அவர் இறங்கி வந்து ஆடிய ஷாட்கள் பார்க்கவே அற்புதமாக இருந்தது.
அப்ரிடி இப்படி அடி வாங்குவதை கவனித்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் அவருக்கு ஓவர் வழங்குவதை நிறுத்தினார். அப்ரிடி 3 ஓவர்கள் மட்டும் வீசியிருந்தார். இதனிடையே, கேட்ச் பிடிக்க முயன்ற அப்ரிடிக்கு இடது கையின் நடுவிரலில் காயம் ஏற்பட்டது. அதனால் அவர் ஓய்வு எடுக்க வெளியேறினார்.
கேப்டன் ரோகித் - கில் ஜோடி அதிரடியாக விளையாடி வரும் நிலையில், கடந்த ஆட்டத்தைப் போல இந்திய தொடக்க வீரர்கள் பதட்டத்துடன் ஆடுவார்கள் என எதிர்பார்த்த பாகிஸ்தானுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“