worldcup 2023 | shubman-gill: இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான சுப்மன் கில் இன்று சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், அவரது உடலில் ரத்த தட்டை அணுக்கள் சற்று குறைந்ததை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
"சுப்மான் கில்லின் ரத்த தட்டை அணுக்கள் குறைந்துவிட்டதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பி.சி.சி.ஐ-யின் மருத்துவக் குழுவும் அவரைக் கண்காணித்து வருகிறது" என்று கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி அதன் அடுத்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை டெல்லியில் நாளை புதன்கிழமை சந்திக்கிறது. இந்தப் போட்டிக்காக இந்தியா டெல்லி சென்ற நிலையில், இப்போட்டியில் சுப்மன் கில் விளையாடமாட்டார் என்றும், அவர் சென்னையில் தங்கி மருத்துவ கண்காணிப்பில் இருப்பார் என்றும் பி.சி.சி.ஐ நேற்று திங்கள் கிழமை தெரிவித்தது.
இதுதொடர்பாக பி.சி.சி.ஐ வெளியிட்ட அறிக்கையில், "இந்தியா அணியின் பேட்ஸ்மேன் சுப்மன் கில், 9 அக்டோபர் 2023 அன்று டெல்லிக்கு அணியுடன் பயணிக்க மாட்டார். சென்னையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐசிசி ஆண்கள் உலகக் கோப்பை 2023ல் அணியின் முதல் ஆட்டத்தைத் தவறவிட்ட தொடக்க வீரர், அக்டோபர் 11 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அணியின் அடுத்த ஆட்டத்தை பங்கேற்கவில்லை. அவர் சென்னையில் தங்கி மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் இருப்பார்." என்று தெரிவித்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“