Shubman Gill Tamil News: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியிடம் பறிகொடுத்தது. தொடர்ந்து அந்த அணி 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், ராஞ்சியில் நடந்த முதல் ஆட்டத்தில் 21 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தும், லக்னோவில் நடந்த 2-வது ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவும் வென்றன. இதனால் தொடர் 1 -1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.
இந்த நிலையில், தொடரைக் கைப்பற்றப் போவது யார்? என்பதை தீர்மானிக்கும் கடைசி மற்றும் 3வது டி20 போட்டி இன்று புதன் கிழமை (பிப்ரவரி 1 ஆம் தேதி) குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கிறது.
3 வடிவ கிரிக்கெட்டிலும் சதம் அடித்த 5-வது இந்திய வீரர் கில்: மற்ற 4 பேர் யார், யார்?
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதனால், நியூசிலாந்து அணி பவுலிங் செய்தது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ஷுப்மான் கில் - இஷான் கிஷன் ஜோடி களமிறங்கினர். இந்த ஜோடியில் தனது மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் கில். ஒரு முனையில் விக்கெட்டுகள் இழப்பு நேர்ந்தாலும், அவர் தனது நேர்த்தியான ஆட்டத்தை நிறுத்தவில்லை.
ஆரம்ப ஓவர்களில் பவுண்டரிகளை விரட்டிக் கொண்டிருந்த அவர் அவ்வப்போது சிக்ஸர்களை பறக்க விட்டு, அங்கு திரண்டிருந்த ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைத்து வான வேடிக்கை காட்டினார். 36 பந்துகளில் அரைசதமும், 54 பந்துகளில் சதமும் அடித்து மிரட்டினார். அதோடு நின்றுவிடாமல் கடைசி வரை ஆட்டமிழக்கமால் 63 பந்துகளில் 12 பவுண்டரிகள் 7 சிக்ஸர்களை விளாசி 126 ரன்கள் குவித்தார். இந்த அசத்தல் சதம் மூலம் 3 வடிவ கிரிக்கெட்டிலும் சதம் அடித்த 5-வது இந்திய வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் கில்.
இந்தியாவுக்காக மூன்று வடிவங்களிலும் சதம் விளாசி வீரர்கள் பட்டியல்:
- சுரேஷ் ரெய்னா
- ரோகித் சர்மா
- கேஎல் ராகுல்
4.விராட் கோலி
- ஷுப்மான் கில்
நியூசிலாந்துக்கு எதிராக அதிக தனிநபர் ஸ்கோர்:
ஒருநாள் போட்டி: ஷுப்மான் கில் (208)
டி20 போட்டி: ஷுப்மான் கில் (123*)
டி20 போட்டிகளில் ஒரு இந்திய வீரரின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர்:
123* ஷுப்மான் கில் vs நியூசிலாந்து அகமதாபாத் 2023
122* விராட் கோலி vs ஆப்கானிஸ்தான் துபாய் 2022
118 ரோஹித் சர்மா vs இலங்கை இந்தூர் 2017.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil