Rohit Sharma | Shubman Gill | T20 World Cup 2024: 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் கடந்த 2 ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் அடுத்த சுற்றான சூப்பர் 8-க்கு இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட அணிகள் தகுதி பெற்றுள்ளன. முன்னாள் சாம்பியன்களான பாகிஸ்தான், இலங்கை வெளியேறியுள்ளன.
இந்நிலையில், இந்த தொடரில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா - கனடா அணிகளுக்கு இடையிலான 33-வது லீக் ஆட்டம் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்க இருந்தது. ஆனால், மழை காரணமாக டாஸ் கூட போடப்படாமல் போட்டி ரத்து செய்யப்பட்டது. இதனால், இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது.
இதனிடையே, டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் காத்திருப்பு வீரராக (ரிசர்வ் பிளேயர்) இடம் பிடித்து இருந்தார் இளம் வீரர் சுப்மன் கில். அவர் இந்திய அணியுடனான அவரது பொறுப்புகளை விட தனிப்பட்ட வணிக முயற்சிகளில் கவனம் செலுத்தியதாகவும், அதனால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு அமெரிக்காவில் இருந்து சுப்மான் கில் வீட்டுக்கு அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியது.
ஆனால், அவரையும், அவேஷ் கானையும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப காரணம், இந்திய அணியில் தற்போதைக்கு போதுமான காத்திருப்பு வீரர்கள் உள்ளதாகவும், அதனால் தான் கில் மற்றும் அவேஷ் கான் தாயகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இளம் வீரர் சுப்மன் கில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவை இன்ஸ்ட்ராகிராமில் 'அன்பாலோ' செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணி அமெரிக்காவிற்கு வந்ததிலிருந்து, கில் அணியுடன் பயணம் செய்யவில்லை. அதற்கு பதிலாக தனது கிரிக்கெட் கடமைகளை முழுமையாக அர்ப்பணிப்பதை விட தனது வணிக முயற்சிகளுக்கு குறிப்பிடத்தக்க நேரத்தை ஒதுக்கியுள்ளார். இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் கலீல் அகமது, அவேஷ் கான் மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் அணிக்கு ஆதரவாக இருந்தபோது, சுப்மன் கில் இல்லாதது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் கேப்டன் ரோகித் சர்மாவை கில் பின்தொடர்வதை நிறுத்தியதால், கில் மற்றும் ரோகித் சர்மா இடையேயான பதற்றம் குறித்து ஊகங்கள் எழுந்துள்ளன. இதனால், கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். தற்போது இந்திய அணி, சூப்பர் 8 சுற்று போட்டிக்கு தீவிரமாக தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“