9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிகள் கடந்த 19 ஆம் தேதி முதல் பாகிஸ்தான் மற்றும் துபாயில் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்தத் தொடரில், துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று பிற்பகல் 2:30 மணிக்கு நடந்து வரும் முதல் அரைஇறுதியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஸ்டீவ் ஸ்மித்தின் ஆஸ்திரேலியாவுடன் மோதி வருகின்றன.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி, ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர்களாக கூப்பர் கான்னோலி - டிராவிஸ் ஹெட் ஜோடி களம் புகுந்தனர். தங்களது அணிக்கு அதிரடியான தொடக்கம் கொடுக்க நினைத்த இந்த ஜோடியில் கூப்பர் கான்னோலி ரன் எதுவும் எடுக்காமல் டக்-அவுட் ஆகி வெளியேறினார்.
இதன்பிறகு களமிறங்கிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் உடன் ஜோடி அமைத்தார். இதில், 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் என அதிரடி காட்டிய டிராவிஸ் ஹெட் வருண் சக்கரவர்த்தி பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
இந்தக் கேட்சை சுப்மன் கில் லாவகமாக பிடித்து அசத்தினார். ஆனால், கேட்ச் பிடித்த கில்லை களநடுவர் அழைத்து அவருக்கு எச்சரிக்கை கொடுத்தார். கில் பந்தை கேட்ச் பிடித்தவுடன் லாங்-ஆஃப் நோக்கி வீசி விட்டு மைதானத்தை சுற்றி ஓடி தனது உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
கில் சரியாக கேட்சை பிடித்து இருந்தாலும், அவர் பந்தை கையில் பிடித்த உடனேயே பந்தை தூக்கி எறிந்து விட்டார். இதனைப் பார்த்த கள நடுவர் அவரது செயலில் திருப்தி அடையவில்லை. இதனால், அவருக்கு எச்சரிக்கை வழங்கினார்.
விதி கூறுவது என்ன?
ஒரு கேட்சை முடிக்க ஒரு ஃபீல்டர் எவ்வளவு நேரம் பந்தை வைத்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட காலக்கெடு எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றாலும், கேட்ச் முடிந்ததாகக் கருதப்படுவதற்கு முன்பு வீரர் பந்தின் மீதும் தனது சொந்த இயக்கத்தின் மீதும் முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும் என்று மேரிலேபோன் கிரிக்கெட் கிளப் (எம்.சி.சி) விதி கூறுகிறது.
"கேட்ச் எடுக்கும் செயல், பந்து முதலில் ஒரு பீல்டரின் நபருடன் தொடர்பு கொள்ளும் நேரத்திலிருந்து தொடங்கும், மேலும் ஒரு பீல்டர் பந்து மற்றும் அவரது சொந்த இயக்கம் இரண்டின் மீதும் முழுமையான கட்டுப்பாட்டைப் பெற்றவுடன் முடிவடையும்" என்று விதி கூறுகிறது.
இரு அணிகளின் பிளேயிங் லெவன் வீரர்கள் பட்டியல்:
ஆஸ்திரேலியா: கூப்பர் கோனொலி, டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), மார்னஸ் லாபுஷாக்னே, ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), அலெக்ஸ் கேரி, க்ளென் மேக்ஸ்வெல், பென் துவர்ஷூயிஸ், நாதன் எல்லிஸ், ஆடம் ஜம்பா, தன்வீர் சங்கா.
இந்தியா: ரோகி த் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி.