Siechem Madurai Panthers vs Ba11sy Trichy, 21st Match Tamil News: 7-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டிகள் தமிழகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் புள்ளிகள் பட்டியலில் 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள கோவை கிங்ஸ் முதல் அணியாக பிளே ஆஃப்-க்கு முன்னேறியுள்ளது. தலா 8 புள்ளிகளுடன் உள்ள 2ம் மற்றும் 3ம் இடத்தில் உள்ள நெல்லை - திண்டுக்கல் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. சேப்பாக், திருப்பூர் மற்றும் மதுரை அணிகளும் பிளே-ஆஃப் போட்டியில் உள்ளனர்.
இந்நிலையில், சேலத்தில் இன்று இரவு நடைபெற உள்ள போட்டியில் மதுரை பாந்தர்ஸ் - பால்சி திருச்சி அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இரவு 7.15 மணிக்கு தொடங்க உள்ளது.
இந்தப்போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இரு அணிகளின் விளையாடும் வீரர்கள் விவரம்
சீசெம் மதுரை பாந்தர்ஸ் : ஹரி நிஷாந்த் (கேப்டன்), சுரேஷ் லோகேஷ்வர் (விக்கெட் கீப்பர்), ஜகதீசன் கவுசிக், ஸ்வப்னில் சிங், வாஷிங்டன் சுந்தர், எஸ் ஸ்ரீ அபிசேக், முருகன் அஷ்வின், கே தீபன் லிங்கேஷ், பி சரவணன், குர்ஜப்னீத் சிங், அஜய் கிருஷ்ணா
பால்சி திருச்சி : கங்கா ஸ்ரீதர் ராஜு (கேப்டன்), டி சரண் (விக்கெட் கீப்பர்), பி பிரான்சிஸ் ரோகின்ஸ், மணி பாரதி, ஜாபர் ஜமால், டேரில் ஃபெராரியோ, ஆர் ராஜ்குமார், ஆண்டனி தாஸ், ஆர் சிலம்பரசன், டி நடராஜன், கே ஈஸ்வரன்
திருச்சி பேட்டிங்
திருச்சி அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய ஸ்ரீதர் ராஜா டக் அவுட் ஆனார். மற்றொரு தொடக்க வீரர் 5 ரன்களில் வெளியேறினார். அடுத்ததாக பிரான்சிஸ் மற்றும் மணி பாரதி ஜோடி சேர்ந்து அணி எண்ணிக்கையை உயர்த்த போராடினர். இதற்கிடையில் பிரான்சிஸ் 18 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய பெராரியோ சிறிது நேரம் தாக்குப் பிடித்து ஆடி 21 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய ஜமால் 1 ரன்னில் அவுட் ஆக, ராஜ்குமார் டக் அவுட் ஆனார். அடுத்து வந்த ஆண்டனி தாஸ் 3 ரன்களில் வெளியேறினார்.
இந்தநிலையில், மறுமுனையில் சிறப்பாக ஆடி வந்த மணி பாரதி 48 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய கோட்சன் மற்றும் சிலம்பரசன் தலா 1 ரன்னில் அவுட் ஆகினர். இதனையடுத்து திருச்சி அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. திருச்சி அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 105 ரன்கள் மட்டுமே சேர்த்தது. ஈஸ்வரன் 1 ரன்னில் அவுட் ஆகாமல் இருந்தார். மதுரை தரப்பில் சரவணன் 3 விக்கெட்களையும், குர்ஜாப்னீத் மற்றும் அஜய் கிருஷ்ணா தலா 2 விக்கெட்களையும், வாஷிங்டன் சுந்தர், ஸ்வாப்னில், முருகன் அஸ்வின் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
மதுரை பேட்டிங்
மதுரை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக சுரேஷ் மற்றும் ஹரி நிசாந்த் களமிறங்கினர். ஹரி நிசாந்த் 11 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய ஜெகதீஷன் 19 ரன்களில் அவுட் ஆனார். மறுமுனையில் சிறப்பாக ஆடி வந்த சுரேஷ் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த ஸ்வாப்னில் மற்றும் வாஷிங்டன் சுந்தர், சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றியைத் தேடி தந்தனர். ஸ்பானில் 25 ரன்களும் வாஷிங்டன் சுந்தர் 18 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.
மதுரை அணி 17 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் அடித்து வெற்றி இலக்கைக் கடந்தது. இதன் மூலம் மதுரை 7 விக்கெட் வித்தியாசத்தில் திருச்சியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. திருச்சி தரப்பில் ஈஸ்வரன் 2 விக்கெட்களையும், நடராஜன் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதுவரை 4 போட்டியில் விளையாடியுள்ள மதுரை அணி 2ல் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. பிளே ஆஃப்-க்கு அந்த அணி முன்னேற இன்றைய போட்டியில் வெற்றி பெறுவது அவசியமாகும்.
நடப்பு சீசனில் திருச்சி அணி, நடந்த 4 போட்டியிலும் தோல்வி அடைந்து இன்னும் வெற்றி கணக்கை தொடங்காமல் உள்ளது. அந்த அணி மீதமுள்ள 3 போட்டியிலும் வெற்றி பெற்றால் கூட பிளே ஆஃப்-க்கு முன்னேறுவது கடினம். இருப்பினும், ஆறுதல் வெற்றியுடன் தொடரை நிறைவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil