இந்தியன் பிரீமியர் லீக் 2008 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து, வீரர்களின் அதிரடி ஆட்டங்களுக்கு சிறந்த பிளாட்பார்மாக அமைந்து வருகிறது. இதுவரை நடந்த 13 பதிப்புகளில், இந்த பணக்கார லீக் கிரிக்கெட் ரசிகர்களை பேட் மற்றும் பந்துக்கு இடையில் ஒரு பரபரப்பான போட்டியுடன் முழுமையாக மகிழ்வித்துள்ளது எனக் கூறலாம். அதிலும் வீரர்களால் விளாசப்படும் சிக்ஸர்கள் ரசிகர்களை சீட்டின் நுனியில் உட்காரவைக்க தவறவில்லை.
சிக்ஸர் அடிப்பது ஒரு கலை. பல வீரர்கள் அதற்கான ஆசீர்வாதத்தை பெறவில்லை. ஆனால் இந்தக் கலையை பெற்ற ஒரு சில வீரர்களில் ஆர்.சி.பியின் ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் பொல்லார்ட் ஆகியோர் தனித்து நிற்கிறார்கள். 360 டிகிரி ஸ்ட்ரோக் ஷாட்களுக்கு பெயர் பெற்ற டிவில்லியர்ஸ், இந்த பட்டியலில் அவர் இடம்பெறுவது ஆச்சரியமல்ல. நேற்றைய ஆட்டத்தில்கூட, மும்பையின் ஜஸ்பிரித் பும்ரா ஏபிடிக்கு எதிராக ஒரு சுவாரஸ்யமான தந்திரத்தை பயன்படுத்தினார். ஸ்டம்பிற்கு வெளியே ஏபிடியின் உடலை குறிவைத்து பும்ரா பந்துவீசி நெருக்கடி கொடுத்தார்.
இருப்பினும், அதில் ஏதேனும் பிழை ஏற்பட்டால், உடனே பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்டார் டிவில்லியர்ஸ். பும்ரா எப்போதெல்லாம் ஒரு லெந்த் டெலிவரிவீசுகிறாரோ, அப்போதெல்லாம் டிவில்லியர்ஸ் ஒரு பிரம்மாண்டமான சிக்ஸரை பறக்கவிட்டார். டிவில்லியர்ஸ், டெத் ஓவர்களில் தனது எல்லா சக்தியையும் பயன்படுத்தி 24 பந்துகளில் 55 ரன்களைக் குவித்து, 200 ரன்களைக் கடக்க உதவினார். அவரது இன்னிங்ஸில் நான்கு சிக்ஸர்கள் மற்றும் பல பவுண்டரிகள் அடிக்கப்பட்டன. அதிலும், பும்ரா ஓவரில் விரைவாகவும், மிருகத்தனமானமாகவும் அவர் அடித்த அடி நீண்ட காலமாக நினைவில் வைக்கப்படும்.
பொறிந்து தள்ளிய பொல்லார்ட்!
ஆர்.சி.பிக்கு எதிரான பொல்லார்ட்டின் 50 ரன்கள் மும்பையை மீண்டும் அசுர பலத்துடன் போட்டிக்குள் கொண்டுவந்தது. ஐபிஎல் போட்டிகளில் 22 பந்துகளில் அல்லது அதற்கும் குறைவான பந்துகளில் பொல்லார்ட்டால் அடிக்கப்பட்ட ஆறாவது அரைசதம் ஆகும். இதற்கிடையே, ஆர்.சி.பியின் இரண்டு லெக் ஸ்பின்னர்களான யுஸ்வேந்திர சாஹல் மற்றும் ஆடம் ஜாம்பா ஆகியோருக்கு எதிராக பொல்லார்ட் நேற்று ருத்ர தாண்டவம் ஆடினார். ஆட்டத்தின் தொடக்கத்தில் ஒரு கட்டத்தில் பொல்லார்ட் 10 பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். ஆனால் அடுத்த 10 பந்துகளில் 50ஐ எட்டினார் என்றால் எந்த அளவுக்கு ருத்ர தாண்டவம் ஆடி இருப்பார் என்று பார்த்துக்கொள்ளுங்கள்.
இஷான் கிஷனின் மரண அடி!
சிக்ஸர் மன்னர்கள் வரிசையில் இஷான் கிஷன் பின்னால் இருக்க விரும்பவில்லை போல. அதற்கு சாட்சி தான் நேற்று அவர் அடித்த அடி. பேட்டிங் செய்ய களத்தில் இறங்கியபோது, மற்றவர்கள் அவுட் ஆனபோதும் ஸ்கோரை அதிகரிக்கும் பொறுப்பை எடுத்துக்கொண்டார் கிஷன். இறுதியாக ஒரு அற்புதமான இன்னிங்க்ஸை விளையாடினார். 99 ரன்கள் அடித்து அவுட் ஆனார். அதில் 9 சிக்ஸர்களும் அடக்கம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"