Asia Cup 2022 – India vs Pakistan Tamil News: 15-வது ஆசிய கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது. 6 அணிகள் கலந்துகொண்ட இத்தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், இன்று முதல் சூப்பர் “4” சுற்று போட்டிகள் நடக்கவுள்ளன.
முன்னதாக நடைபெற்ற லீக் சுற்றின் முடிவில், ஏ’ பிரிவில் இருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளும் தகுதி பெற்றன. இதில், இன்று நடக்கும் முதலாவது சூப்பர் “4” சுற்று ஆட்டத்தில் இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகள் ஷார்ஜாவில் மோதுகின்றன.
நாளை துபாயில் அரங்கேறும் சூப்பர் “4” சுற்று ஆட்டத்தில், சிரிக்கட்டில் பரம போட்டியாளர்களான இந்தியா – பாஸ்கிதான் அணிகள் மோதுகின்றன. ஏற்கனவே நடந்த லீக் ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அணியின் வீரர்களை தயார் செய்து வருகிறது பாகிஸ்தான். ஆனால், மீண்டும் ஒருமுறை முட்டுக்கட்டை போட இந்திய அணி தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது.
ஓவர் ரேட்டின் மீது, இந்தியா – பாகிஸ்தான் அணிகள் ஒரு கண் வைப்பது கட்டாயம் ஏன்?
ஆசியக் கோப்பை தொடருக்கான லீக் சுற்று ஆட்டத்தில், இந்தியா – பாகிஸ்தான் அணிகள் கடந்த ஞாயிற்று கிழமை அன்று துபாயில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த ஆட்டத்தின் போது இரு அணியின் கேப்டன்களும் மெதுவான ஓவர் ரேட்டை (ஒரு ஓவருக்கும் அடுத்த ஓவருக்கும் இடையே பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொள்வது) கடைப்பிடித்ததால், இரு அணிக்கும் போட்டிக் கட்டணத்தில் இருந்து 40 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது.
“குறைந்தபட்ச ஓவர்-ரேட் குற்றங்கள் தொடர்பான ஐசிசி நடத்தை விதிகள் மற்றும் வீரர்களின் ஆதரவுப் பணியாளர்களுக்கான ஐசிசி நடத்தை விதி 2.22ன் படி, வீரர்கள் ஒவ்வொரு ஓவருக்கும் போட்டிக் கட்டணத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்படும். ,” என்று ஐசிசி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“இரு கேப்டன்களும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர் மற்றும் முன்மொழியப்பட்ட அனுமதியை ஏற்றுக்கொண்டனர், எனவே முறையான விசாரணை தேவையில்லை.” என்று ஐசிசி எலைட் பேனல் ஆஃப் மேட்ச் ரெஃப்ரிகளின் ஜெஃப் குரோவ் தெரிவித்தார்.
பாகிஸ்தான் அணியின் ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக, இந்தியாவின் ரன் வேட்டையின் போது அந்த அணி கூடுதலாக ஒரு பீல்டரை 30-யார்டு வட்டத்திற்குள் வட்டத்திற்குள் வைத்திருக்க வேண்டியிருந்தது. அதன்படி, நசீம் ஷா 18வது ஓவரில் 30-யார்டு வட்டத்திற்குள் வந்தார். இதனால், பவர்பிளேக்குப் பிறகு பொதுவாக அனுமதிக்கப்படும் ஐந்து வீரர்களுக்கு பதிலாக, நான்கு வீரர்கள் மட்டுமே பவுண்டரியை நிர்வகிக்கும் கட்டாயம் வந்தது.
அந்த நேரத்தில் இந்தியாவின் வெற்றிக்கு 18 பந்துகளில் 32 ரன்கள் தேவைப்பட்டது. மேலும் ரவீந்திர ஜடேஜா பாக்கிஸ்தானின் ஃபீல்டு கட்டுப்பாட்டை பயன்படுத்தி கவர் மற்றும் மிட்-ஆஃப் இடையே ஒரு பவுண்டரியை விரட்டினார். பின்னர் 11 ரன்களில், அவர் பந்துவீச்சாளரின் தலைக்கு மேல் ஒரு சிக்ஸரை விளாசினார்.
இப்போது இந்திய அணியின் வெற்றிக்கு 12 பந்துகளில் 21 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஹாரிஸ் ரவுப் வீசிய 19வது ஓவரின் 3 வது பந்தை ஹர்திக் பாண்டியா பவுண்டரிக்கு விரட்டினார். பின்னர், 4வது மற்றும் 6வது பந்தில் அவர் 2 பவுண்டரிகளை விளாசினார். இதனால், அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்டது. அதில், முதல் பந்தில் ஜடேஜா அவுட் ஆனார். 2வது பந்தில் ஒரு ரன் எடுத்தார் டி.கே. 3வது பந்தை டாட் பால் விட்டார் பாண்டியா.
இப்போது இந்திய அணியின் வெற்றிக்கு கடைசி மூன்று பந்துகளில் 6 ரன்கள் தேவைப்பட்டன. ஸ்ட்ரைக்கில் இருந்த ஹர்டிக் லாங்-ஆனில் ஒரு சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார். இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
ஸ்லோ ஓவர் ரேட்டிற்கான அபராதம் தொடர்பான ஐசிசியின் புதிய விதிகள் ஜனவரி 16, 2022 முதல் அமலுக்கு வந்தது. அந்த விதிகளின்படி, ஃபீல்டிங் அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் இறுதி ஓவரைத் தொடங்கத் தவறினால், 30-யார்டு வட்டத்திற்கு வெளியே ஒரு பீல்டரை நிறுத்துவார்கள். இந்த நிலையில், இந்தியாவின் இன்னிங்ஸின் கடைசி மூன்று ஓவர்களில் ஒரு பீல்டரை வட்டத்திற்கு வெளியே குறைவாக வைத்திருக்க பாகிஸ்தான் கட்டாயப்படுத்தப்பட்டது.
இந்த புதிய விதியால் பாகிஸ்தான் – இந்திய அணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருந்தாலும், அதிக பின்விளைவை சந்தித்தது என்னவோ பாகிஸ்தான் அணி தான். இதனால், நாளை நடைபெறும் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தின் போது இரு அணியின் கேப்டன்களும், இந்த விதியின் மீது ஒரு கண் வைக்க வேண்டிய காட்டயத்தில் உள்ளனர்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil