worldcup 2023 | india-vs-new-zealand | mumbai | rohit-sharma: இந்திய மண்ணில் விறுவிறுப்பாக அரங்கேறி வரும் 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
இந்நிலையில், இன்று புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கும் முதல் அரையிறுதியில் நியூசிலாந்து - இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
மெதுவான ஆடுகளம்
இந்நிலையில், நியூசிலாந்திற்கு எதிரான இந்தியாவின் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில், வான்கடே ஸ்டேடியம் ஆடுகளத்தில் உள்ள பெரும்பாலான புற்களை நீக்குமாறு (ஷேவ் செய்யுமாறு) பி.சி.சி.ஐ கியூரேட்டர்களிடம் அணி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. அதனால், மெதுவான ஆடுகளம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களுருவில் நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்திற்குப் பிறகு, தங்களின் விருப்பம் குறித்து வான்கடே கியூரேட்டரிடம் அணி நிர்வாகம் தெரிவித்ததாக இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிந்துள்ளது.
பி.சி.சி.ஐ-யின் உள்ளூர் கியூரேட்டர்கள் உலகக் கோப்பையின் போது நாடு முழுவதும் உள்ள ஆடுகளங்களைக் கவனிக்க உள்ளூர் அமைப்பாளர் குழுவை உருவாக்கியுள்ளனர். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஒவ்வொரு ஆட்டத்திற்கும் பல்வேறு மைதானங்களுக்கு தனது சொந்த நிபுணர்களை அனுப்பியது.
இது குறித்து மும்பை கிரிக்கெட் சங்கத்தின் (எம்.சி.ஏ) அதிகாரி ஒருவர் பேசுகையில், இந்திய அணி மும்பையை அடைவதற்கு முன், மெதுவான ஆடுகளத்தை தயார் செய்ய செய்தி அனுப்பப்பட்டதாக உறுதிப்படுத்தினார். "இது ஒரு டர்னராக இருக்காது. ஆனால் அணி மெதுவாக ஆடுகளத்தைக் கேட்டது. நாங்கள் புற்களை நீக்கியதற்கு இதுவே முக்கிய காரணம்,” என்றும் முக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த சில ஆண்டுகளாக சொந்த மண்ணில் இந்தியா மெதுவான ஆடுகளங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. உலகக் கோப்பைக்கு முன், அணி நிர்வாகம் தங்கள் போட்டிகளை மெதுவான ஆடுகளங்களில் நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டது.
தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் நேற்று செவ்வாய்க்கிழமை ஆடுகளத்தை நன்றாகப் பார்த்தனர். நாளின் பிற்பகுதியில், அணி நிர்வாகம் மைதான ஊழியர்களிடம் பேசி, அவர்களின் பயிற்சி அமர்வுக்குப் பிறகு அவர்கள் பனி எதிர்ப்பு ரசாயனத்தை தெளிப்பார்களா என்று கேட்டு அறிந்தார்கள்.
கேப்டன் ரோகித் பேட்டி
முந்தைய போட்டிகளின் போது வான்கடேவில் சேஸிங் செய்வது கடினமாக இருந்தது. இதுவரை அங்கு நடந்த நான்கு ஆட்டங்களில் மட்டுமே இரண்டாவது பேட்டிங் அணி வென்றுள்ளது. அதுவும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கிளென் மேக்ஸ்வெல்லின் அதிரடி காரணமாக ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
இந்தப் போக்கு குறித்து உள்ளூர் வீரரான கேப்டன் ரோகித்திடம் கேட்டபோது, “நான் இங்கு நிறைய கிரிக்கெட் விளையாடியுள்ளேன். வான்கடே என்றால் என்ன என்பது பற்றி கடைசி 4-5 ஆட்டங்கள் எனக்கு அதிகம் சொல்லாது. டாஸ் ஒரு முக்கிய காரணியாக இருக்காது என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்." என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.