SMAT 2021 quarterfinal Tamil News: 13-வது சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் கடந்த நவம்பர் 4ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்த தொடருக்கான காலிறுதி போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் தமிழ்நாடு, ராஜஸ்தான், பெங்கால், குஜராத், ஹைதராபாத், கேரளா, விதர்பா, கர்நாடகம் ஆகிய அணிகள் காலிறுதிக்குள் நுழைந்துள்ளன. இதில் தமிழ்நாடு - கேரளா அணிகள் நேற்றை காலிறுதிப் போட்டியில் மோதின.
பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கேரள அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் குவித்தது. அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்த தொடக்க வீரர் குன்னும்மாள் அரைசதம் கடந்து (43 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 51 ரன்கள்) ஆட்டமிழந்தார். அவருடன் மறுமுனையில் களமிறங்கிய முகமது அசாருதீன் 15 ரன்களுடனும், பின்னர் வந்த சச்சின் பேபி 33 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் முருகன் அஸ்வின் வீசிய 12.6 ஓவரில் டக் அவுட் ஆகிய நடையை கட்டினார். பின்னர் வந்த விஷ்ணு வினோத் அதிரடியாக ஆட்டத்தை தொடர அணியின் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. விஷ்ணு தனக்கு வீசப்பட்ட பந்துகளை பவுண்டரி சிக்ஸர் என பறக்க விட்டவே தமிழக பந்து வீச்சாளர் அவருக்கு பந்து வீசவே திணறினார்கள்.
மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விஷ்ணு 26 பந்துகளில் 7 சிக்ஸர், 2 பவுண்டரி என ருத்ரதாண்டவம் ஆடி 5 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். தமிழக தரப்பில் சஞ்சய் யாதவ் 2 விக்கெட்டையும், முருகன் அஸ்வின், எம் முகமது தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்
தொடர்ந்து 182 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய தமிழக அணியில் களமிறங்கிய வீரர்கள் அனைவரும் அணியின் வெற்றிக்காக சிறப்பான பங்களிப்பை அளித்தனர். இதில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 31 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 46 ரன்களை விளாசினார். களத்தில் இறுதியில் இருந்த ஷாருக் கான் (19) - முகமது (6) ஜோடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர்.
இதனால், தமிழக அணி 20 ஓவர்கள் முடிய 3 பந்துகள் மீதமிருந்த நிலையில் 19.3 ஓவரில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் தமிழக அணி அரையிறுதிக்கு தற்போது முன்னேறியுள்ளது.
நாளை காலை 8:30 மணிக்கு நடக்கவுள்ள முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு அணி ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது. மதியம் 1:00 தொடங்கும் மற்றொரு அரையிறுதியில் கர்நாடகா - விதர்பா அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டங்களில் தகுதி பெறும் அணிகள் வருகிற திங்கள் கிழமை டெல்லியில் நடக்கும் இறுதிப்போட்டியில் (நவம்பர் 22ம் தேதி) களமிறங்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.