மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் ஆரம்பித்துவிட்டது. இதில் மற்ற அணிகளை காட்டிலும், சென்னை அணியின் நிலைமை தான் கேள்விக்குறியாக இருக்கிறது. விளையாடிய 3 போட்டிகளில் இரண்டு தோல்வி. அதிலும் மூன்றாவது போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக 176 ரன்களை சேஸ் செய்ய முடியாமல் சென்னை அணி வீரர்கள் திணறியது சர்ச்சை ஆகியுள்ளது. குறிப்பாக ராயுடு, ஃபாஃப் டு பிளெசிஸ் தவிர, மற்ற வீரர்கள் சொல்லிக்கொள்ளும்படியாக விளையாடவில்லை என்பதே நிதர்ஸனம்.
வெள்ளிக்கிழமை டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிராக 46 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே தோல்வி கண்டதும், சுரேஷ் ரெய்னா அணிக்கு திரும்ப வேண்டும் என ட்விட்டரில் ரசிகர்கள் கேட்கத் தொடங்கினர். அதற்கு தற்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் பதிலளித்துள்ளார். அதில், ``ரெய்னா பற்றி இப்போது யோசிக்க இயலாது. ஏற்கனவே இந்த சீசனில் விளையாடப்போவதில்லை என்று அவரே கூறிவிட்டார். அவரின் முடிவை நாங்கள் மதிக்கிறோம். அவர் அணிக்கு மீண்டும் வருவது பற்றியும் எதுவும் கூற இயலாது.
ஆனால் நாங்கள் வலுவாகத் திரும்புவோம் என்று ரசிகர்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். இது ஒரு விளையாட்டு, விளையாட்டில் நல்ல மற்றும் கெட்ட நாட்கள் எப்போதும் வரும். ஆனால் வீரர்கள் என்ன செய்ய வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியும்" என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார். இதற்கிடையே, டெல்லி அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு சென்னை அணியில், பேட்டிங் சரியில்லை என்பதை தோனியே ஒப்புக்கொண்டார்.
இதுதொடர்பாக பேசுகையில், ``பேட்டிங் எங்களுக்கு கொஞ்சம் சாதகமாக இல்லை என்பது வேதனையளிக்கிறது. மெதுவான தொடக்கத்தால் ரன் ரேட் அதிகரிக்கிறது. இதனால் கூடுதல் அழுத்தம் ஏற்படுகிறது. இதனை சரி செய்ய வேண்டும். சில விஷயங்களை தெளிவாக சரி செய்து மீண்டும் திரும்ப வேண்டும்" என்று தோனி கூறினார். இதேபோல் சென்னை அணியின் பயிற்சியாளர் ஃபிளமிங்கும், ``நாங்கள் இந்த நேரத்தில் சற்று குழப்பத்தில் இருக்கிறோம். சில முக்கிய வீரர்களை மிஸ் செய்கிறோம். ரெய்னா, ராயுடு போன்ற முக்கிய வீரர்கள் இல்லாத நிலையில் பேட்டிங் வரிசை குழப்பமடைந்தது. ரெய்னா மற்றும் ராயுடு இல்லாமல் ஒரு கலவையை கண்டுபிடிக்க முயற்சிக்கிறோம்" என்று கூறியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"