'வொண்டர் வுமன்' மந்தனா! ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதலிடம்!

15 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள மந்தனா, 8 அரைசதம் மற்றும் 2 சதங்கள் விளாசியுள்ளார்

ஸ்ம்ரிதி மந்தனா… இன்றைய இந்திய பெண்கள் கிரிக்கெட்டின் ஹாட் பிளேயர். பல இளைஞர்களின் ஃபேவரைட் இந்திய வுமன் கிரிக்கெட்டர். இதையெல்லாம் தாண்டி, ஒருநாள் கிரிக்கெட்டில் உச்சக்கட்ட ஃபார்மில் இருக்கும் இந்திய வீராங்கனை.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் முதன் முதலாக வென்று சரித்திரம் படைத்திருக்கிறது.

இதில், முதல் ஒருநாள் போட்டியில் 104 பந்துகளில் 105 ரன்கள் அடித்த மந்தனா, SENA நாடுகள் என்று அழைக்கப்படும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் சதம் அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.

இரண்டாவது ஒருநாள் போட்டியில், 83 பந்தில் 90 ரன்கள் அடித்து நாட் அவுட்டாக விளங்கினார். டார்கெட் குறைவாக இருந்ததால், அவரது மற்றொரு சதம் அங்கே ஜஸ்ட் மிஸ் ஆனது. இல்லையெனில், இரண்டாவது மேட்ச் வின்னிங் சதத்தை விளாசி அசத்தி இருப்பார்.

இரண்டு போட்டியிலும், தனி ஆளாக மேட்சை முடித்து வைத்து, இந்திய அணி முதன் முதலாக நியூசிலாந்தில் ஒருநாள் தொடரை வெல்ல உதவினார்.

2018 முதல் இதுவரை 15 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள மந்தனா, 8 அரைசதம் மற்றும் 2 சதங்கள் விளாசியுள்ளார்.

இந்நிலையில், இன்று வெளியாகியுள்ள ஐசிசி பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்வுமன் தரவரிசையில், ஸ்ம்ரிதி மந்தனா 751 ரேட்டிங்குடன் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். ஆஸ்திரேலியாவின் எலைஸ் பெர்ரி, மெக் லானிங் 681, 675 ரேட்டிங்குடன் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளனர். இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் மிதாலிராஜ் 669 ரேட்டிங்குடன் நான்காவது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்தில் சரிந்தார்.

முதலிடம் பிடித்த மந்தனாவுக்கு ரசிகர்களின் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close