நியூஸிலாந்திற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், ஸ்ம்ரிதி மந்தனாவின் மற்றுமொரு 'ஒன் வுமன் ஷோ' ஆட்டத்தால், இந்தியா வெற்றிப் பெற்று தொடரையும் வென்று அசத்தியுள்ளது.
'ஷீ ஈஸ் இன் டெரிஃபிக் ஃபார்ம்' என்று அழைக்கும் அளவுக்கு இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்ம்ரிதி மந்தனா சிறப்பான ஃபார்மில் உள்ளார். நியூஸிலாந்திற்கு எதிராக, பே ஓவலில் இன்று நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியின் முடிவும், மந்தனாவின் டீப் பேட்டிங்கும் நமக்கு அதை உணர்த்துகிறது.
டாஸ் வென்ற இந்திய கேப்டன் மிதாலி ராஜ் பவுலிங்கை தேர்வு செய்ய, முதலில் ஆடிய நியூசிலாந்து 44.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 161 ரன்கள் மட்டும் எடுத்தது. ஜுலன் கோஸ்வாமி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
தொடர்ந்து சேஸிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் ஓப்பனர் ஜெமிமா ரோட்ரிக்ஸ் பூஜ்யத்தில் வெளியேறினார். ஆனால், மற்றொரு ஓப்பனர் மந்தனா எதைப் பற்றியும் கவலைப்படாமல் தனது 'கேஷுவல் வித் டீப்' ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அவருக்கு, இந்திய கேப்டன் மிதாலி ராஜ் பார்ட்னர்ஷிப் கொடுக்க, இந்திய அணி 35.2வது ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 166 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது.
மந்தனா 83 பந்தில் 90 ரன்களும், மிதாலி ராஜ் 111 பந்துகளில் 63 ரன்களும் எடுத்து நாட் அவுட்டாக இறுதி வரை களத்தில் நின்று, வெற்றிக்கு வழிவகுத்தனர்.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் சதம் அடித்த மந்தனா, SENA நாடுகள் என்று அழைக்கப்படும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் சதம் அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றிருந்தார்.
தற்போது, மீண்டும் இன்றைய போட்டியில் அபாரமாக விளையாடி அசத்தி இருக்கிறார் இந்த வாவ் லேடி! அதுமட்டுமின்றி, கடந்த 10 ஒருநாள் போட்டிகளில் இது அவரது 8வது அரைசதம் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில், விராட் கோலி தலைமையிலான இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் ஒருநாள் தொடரை வென்ற நிலையில், இந்திய மகளிர் அணியும் தற்போது ஒருநாள் கோப்பையை கைப்பற்றியுள்ளது.