Sourav Ganguly | Gautam Gambhir | BCCI: இந்திய ஆடவர் சீனியர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் இந்திய கேப்டன் ராகுல் டிராவிட் செயல்பட்டு வருகிறார். அவரது பதவிக்காலம் வருகிற ஜூன் 2 முதல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பையுடன் முடிவடைகிறது.
இந்நிலையில், அடுத்த தலைமை பயிற்சியாளருக்கான தேடலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) தொடங்கியது. இதற்காக சி.எஸ்.கே தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங், டெல்லி கேபிட்டல்ஸ் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கர், குஜராத் டைட்டன்ஸ் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் உள்ளிட்டோருடன் பி.சி.சி.ஐ பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது.
இவர்களில், கவுதம் கம்பீரை பயிற்சியாளராக கொண்டு வரும் திட்டத்தில் பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய் ஷா இருப்பதாக தகவல் வெளியாகியது. ஆனால், இதுதொடர்பாக கம்பீர் இதுவரை எந்த கருத்தும் வெளியிடவில்லை. இருப்பினும், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்படுவது உறுதியாகியுள்ளதாகவும், இது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் சமீபத்திய செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், 'இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரை புத்திசாலித்தனமாக தேர்வு செய்ய வேண்டும்' என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் பி.சி.சி.ஐ தலைவருமான சவுரவ் கங்குலி சூசகமாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கங்குலி தனது எக்ஸ் பக்க பதிவில், "ஒருவரின் வாழ்க்கையில் பயிற்சியாளரின் முக்கியத்துவம், அவரின் வழிகாட்டுதல் மற்றும் இடைவிடாத பயிற்சி ஆகியவை எந்தவொரு நபரின் எதிர்காலத்தையும், களத்திற்கு உள்ளேயும் வெளியேயும் வடிவமைக்கின்றன. எனவே, பயிற்சியாளர் மற்றும் நிறுவனத்தை புத்திசாலித்தனமாக தேர்வு செய்யவும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
கங்குலியின் இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் தங்கள் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகிறார்கள். கங்குலி கிரெக் சேப்பலின் கீழ் விளையாடிய நாட்களில் தனது கடினமான காலங்களை நினைவுகூர்ந்து இந்தப் பதிவு போட்டுள்ளார் என்று சிலர் கூறியுள்ளனர். இன்னும் சிலரோ, கம்பீரின் நியமனத்திற்கு எதிராக கங்குலி கருத்து தெரிவிக்கிறாரா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“