Sourav Ganguly Tamil News: இந்திய கிரிக்கெட் அணியின் டி20 கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி சமீபத்தில் விலகியதால், மூத்த வீரர் ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கும் ரோகித் சர்மாவை கேப்டனாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நியமித்துள்ளது. ரோகித் சர்மா ஜனவரி மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் கேப்டனாக தனது பணியை தொடர்வார் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ரோகித் சர்மா ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்தும், விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது குறித்தும் பிசிசிஐ தலைவைர் சவுரவ் கங்குலி தற்போது பேசியுள்ளார். அதில் அவர், டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் செயல்திறனைப் பொருட்படுத்தாமல், விராட் கோலி டி20 கேப்டன் பதவியை ராஜினாமா செய்திருக்காவிட்டால், ஒயிட்-பால் கேப்டனாகத் தொடர்ந்திருப்பார் என்றும், கோலி குறுகிய வடிவத்தில் கேப்டன் பதவியில் இருந்து விலகியதும், குழப்பத்தைத் தவிர்க்கவே சிவப்பு மற்றும் வெள்ளை பந்து கேப்டன்களை முற்றிலும் பிரிக்க தேர்வாளர்கள் முடிவு செய்தனர் என்றும் தெரிவித்துள்ளார்.

“டி20 கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டாம் என்று விராட் கோலியை நாங்கள் (பிசிசிஐ) கேட்டுக் கொண்டோம். கேப்டன் பதவியை வேறு ஒருவருக்கு மாற்றும் திட்டம் அப்போது இல்லை. ஆனால், அவர் தான் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.தேர்வாளர்கள் வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கேப்டன் பதவியைப் பிரிக்க வேண்டாம் என்று முடிவு செய்தனர். இதனால் அவர்கள் முழுமையான பிரிவைத் தேர்ந்தெடுத்தனர்.” என்று கங்குலி’தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ இதழுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கோலியின் பொறுப்பின் கீழ் அனைத்து வடிவங்களிலும் இந்திய அணியின் சிறந்த செயல்திறனைப் பற்றி பேசியுள்ள கங்குலி, “கோலி ஐசிசி நடத்திய பெரிய தொடர்களில் கோப்பை வெல்லலாது கவலை அளித்தது. ஆனால் உண்மையில், அவருக்கு உதவுவதற்காக, டி20 உலகக் கோப்பைக்கான அணியின் வழிகாட்டியாக எம்எஸ் தோனியை கொண்டு வந்தோம். இந்த முயற்சி முன்னாள் கேப்டன் தோனியால் “முற்றிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது”.

டி20 உலகக் கோப்பையில் இருந்து லீக் சுற்றோடு இந்தியா வெளியேறியது. ஆனால் அது கோலியின் கேப்டன்சியை பாதித்திருக்காது. ஆனால், அவர் டி20 கேப்டனாக தொடர மறுத்ததால், அனைத்து வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட்டுக்கும் ரோகித் சர்மாவை தேர்வுக்குழு நியமிக்க வேண்டியிருந்தது. “இரண்டு ஒயிட்-பால் கேப்டன்கள் இருக்க முடியாது என்பதே இதன் முக்கிய அம்சம்” என்று கூறியுள்ளார்.
தவிர, ஒருநாள் கேப்டன்சி மாற்றம் குறித்து கோலியுடம் தனிப்பட்ட முறையில் தான் பேசியதாகவும், தேர்வாளர்களும் கோலியிடம் பேசியதாகவும், ஆனால், கோலி அவர்களின் எவ்வித கருத்துக்களும் செவி சாய்க்கவில்லை என்றும் பிசிசிஐ தலைவர் கங்குலி குறிப்பிட்டுள்ளார்.

கேப்டன் கோலி வெள்ளை பந்து கேப்டன்களில் மிகவும் வெற்றிகரமான ஒருவர். 95 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியை வழிநடாத்தியுள்ள அவர் 65ல் வெற்றி பெற செய்திருக்கிறார். 45 டி20 போட்டிகளில், இந்தியாவை 27 முறை வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் அவர் தனது பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்த டி20 கேப்டனாக தொடர விரும்பாததற்கு ஃபார்ம் சரிவு ஒரு காரணமாக இருக்கலாம்.
கோலி கடந்த இரண்டு ஆண்டுகளில் 12 ஒருநாள் போட்டிகளில் சதம் ஏதுமின்றி 560 ரன்கள் எடுத்துள்ளார். இந்த காலகட்டத்தில் அவரது சராசரி 46.66 ஆகும். இது அவரது எக்கொனமிக் சராசரியான 59.07 க்கும் குறைவாக உள்ளது. அதே காலகட்டத்தில் 20 டி20 போட்டிகளில், அவர் 49.50 சராசரியில் 594 ரன்கள் எடுத்துள்ளார். அதே நேரத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 13 டெஸ்டில் 26.04 சராசரியில் 599 ரன்கள் எடுத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் பொதுவாக வெவ்வேறு வடிவங்களில் வெவ்வேறு கேப்டன்களை நியமிப்பதில்லை. இது இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் பரவலாக உள்ளது. பிளவுபட்ட கேப்டன்சி மற்றும் அணியில் உள்ள இரண்டு அதிகார மையங்கள் முன்னோக்கிச் செல்வதில் சிக்கல்களை உருவாக்குமா என்ற கேள்விக்கு, கங்குலி எதிர்மறையாக பதிலளித்துள்ளார்.
ஆனால், இந்திய டெஸ்ட் அணிக்கு கோலி கேப்டனாகவும், வரையறுக்கப்பட்ட ஓவர் (டி20) கிரிக்கெட்டில் தோனி கேப்டனாகவும் இரண்டு ஆண்டுகள் இருந்தனர் என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“