News about Sourav Ganguly, security Tamil News: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் முன்னாள் பி.சி.சி.ஐ தலைவருமான சவுரவ் கங்குலி-க்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது. இதுவரை கங்குலிக்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கங்குலி-க்கு வழங்கப்பட்டு வந்த 'ஒய்' பிரிவு பாதுகாப்புக்கான கால அவகாசம் முடிவுக்கு வந்த நிலையில், அவருக்கான பாதுகாப்பை இசட் பிரிவுக்கு உயர்த்த மேற்கு வங்க அரசு முடிவு செய்துள்ளதாக அம்மாநில மூத்த அதிகாரி தெரிவித்தார். "விவிஐபியின் பாதுகாப்பு காலாவதியானதால், நெறிமுறையின்படி மறுஆய்வு செய்யப்பட்டது மற்றும் கங்குலியின் பாதுகாப்பு வளையத்தை இசட் பிரிவுக்கு உயர்த்த முடிவு செய்யப்பட்டது," என்று அவர் கூறினார்.
ஒய் பிரிவு பாதுகாப்பின் கீழ், கங்குலி-க்கு ஸ்பெஷல் பிராஞ்சில் இருந்து 3 போலீஸ்சார்கள் அவருக்கு பாதுகாப்பு அளித்தனர். இசட் பிரிவு பாதுகாப்பின் படி, கங்குலிக்கு 8 முதல் 10 போலீசார் பாதுகாப்பு அளிப்பார்கள். "நேற்று செவ்வாயன்று, மாநில செயலகத்தின் அதிகாரிகள் கங்குலியின் பெஹாலா அலுவலகத்தை அடைந்தனர். அங்கு அவர்கள் கொல்கத்தா காவல்துறை தலைமையகமான லால்பஜார் மற்றும் உள்ளூர் காவல் நிலைய அதிகாரிகளுடன் ஒரு சந்திப்பை நடத்தினர்.
கங்குலி தற்போது தனது அணியான டெல்லி டேர்டெவில்ஸ் அணியுடன் பயணம் செய்து வருகிறார், மேலும் மே 21 அன்று கொல்கத்தா திரும்புவார். அன்றிலிருந்து அவருக்கு அவருக்கு தினமும் இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது." என்று அந்த அதிகாரி கூறினார்.
மேற்கு வங்கத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் மற்றும் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மற்றும் தேசிய செயலாளர் அபிஷேக் பானர்ஜி ஆகியோருக்கு இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் ஃபிர்ஹாத் ஹக்கீம் மற்றும் மோலோய் கட்டக் போன்ற அமைச்சர்களுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
பாஜகவின் மேற்கு வங்கத் தலைவர் சுகந்தா மஜும்தாருக்கு சி.ஐ.எஃப். பாதுகாப்புடன் இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.